பக்கம்:இருட்டு ராஜா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150இருட்டு ராஜா

 செய்தியைக் கேட்டு எவர்தான் அதிர்ச்சி ஆடையவில்லை? எல்லோருக்கும் அது நம்ப முடியாத செய்தியாகத்தான் ஒலித்தது. ஆனால் உண்மையாகவே நடந்து முடிந்திருந்தது.

முத்துமாலை செத்துப்போனான்.

ஊருக்குக் கிழக்கே, குளத்தங்கரைச் சாலையை ஒட்டிய பள்ளமான் வயல் பகுதியில், விழுந்து கிடந்தான் அவன்.

ராத்திரி எந்நேரத்தில் விழுந்தானோ? எப்படி விழுந்தானோ? குப்புறக் கிடந்தான்.

காலையில் அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவன் வயலில் எவனோ விழுந்து கிடப்பதைக் கண்டான். குடிகாரப் பய. மூக்கு முட்டக் குடிச்ச போதையிலே கிடக்கான் போலே என்று எண்ணியவனாய் அருகில் போய் கவனித்தான். திடுக்கிட்டான், அது முத்துமாலை.

அந்த ஆள் குரல் கொடுத்தான். தட்டி எழுப்பினான். உடம்பின் மேலே கைவைத்ததுமே விளங்கி விட்டது.முத்துமாலை கட்டையாய்க் கிடந்தான்; உயிர் போய் ரொம்ப நேரம் ஆகியிருக்க வேண்டும். .

அவன் ஊரை நோக்கி நடந்தான். கிராம முனிசீப்பிடம் தெரிவிக்க வேண்டுமே. அவசரமாக நடந்தான். எதிரே வந்தவர்களிடம் தகவல் அறிவித்தவாறு போனான்.

கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். சேதி வேகமாகப் பரவவும், கூட்டம் கூட்டமாய் சென்றார்கள். ஊர் பூராவுமே திருவிழா பார்க்கத் திரண்டது போல் அங்கே கூடியது.

அங்கே முத்துமாலை செத்துக் கிடந்தான்.

ரோட்டு ஓரத்தில் கால் சறுக்கித் தவறி விழுந்து, சரிவில் உருண்டு உருண்டு போய், வயலுக்குள் விழுந்திருக்க வேண்டும். தலையில் பின்புறத்தில் ரத்தம் வந்து, காதின் ஒரம் வழிந்து, கழுத்தில் கறையாகப் படிந்து காய்ந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/152&oldid=1140279" இலிருந்து மீள்விக்கப்பட்டது