பக்கம்:இருட்டு ராஜா.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20இருட்டு ராஜா
 

 அவனுடைய அம்மா வந்து அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே போயிராவிட்டால் முத்துமாலை அன்றைக்கு பாபநாசம் பிள்ளைக்கு ஏதா இது வெட்டுக்காயம் ஏற்படுத்தி ஒரு பாடம் கற்பித்திருப்பான்.

அன்றிலிருந்து பாபநாசம் பிள்ளை அவன் கண்ணில் படுவதேயில்லை. வெறும் சல்லிப்பயல், உருப்படமாட்டான்! என்று மனசுக்குள்ளும், தனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லத் தவறுவதுமில்லை.

“எப்படி உருப்படுவான்? அப்பன் இருக்கையிலேயே மகனை கவனிக்கிறதில்லை. அதன் பிறகு அம்மாக்காரி செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிப் போட்டா. அறு தவி வளர்த்த தறுதலைங்கிறது சும்மாவா?” என்று விமர்சனம் வேறு செய்து வந்தார் அவர்.

முரட்டுத் துணிச்சலின் சக்தியை முதல் அனுபவத்திலேயே நன்றாகக் கண்டுகொண்ட முத்துமாலை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியலானான். எதுக்கெடுத்தாலும் அரிவாளைத் தூக்கினான். அப்போது அவனுக்கு வயது பதினேழு பதினெட்டுதான் இருக்கும்.

அத்த ஊரில் அவனைப் பாராட்டவும், புகழ்ந்து தூண்டிவிடவும் சிலர் இருந்தார்கள். அவனது சுபாவத்துக்கு ஏற்ற சிநேகிதர்களும் சேர்ந்தார்கள். பொழுது போக்குவதற்குச் சீட்டாட்டம். சும்மா ஜாலியா பக்கத்து டவுனுக்குப் போய் வருவது என்றெல்லாம் பழகி, கள்ளு, சாராயம் என்று எது கிடைத்தாலும் குடிப்பது எனத் தேர்ந்து விட்டார்கள்.

இதற்குள் முத்துமாலையின் பழைய சகா காசி பெரிய ஹீரோ ஆகிவிட்டான். அவனுடைய புகழ்ச்சூடு இவனையும் தொட்டு பதப்படுத்தியது. பெரியப்பா பாபநாசம் பிள்ளையும், மண்டையைப் போட்டு விட்டார்.