பக்கம்:இருட்டு ராஜா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்21

 அவருடைய புத்திரபாக்கியங்கள் அவரைப் போல் வாயடியும் செயல் சாமர்த்தியமும் பெற்றிராததனாலே, நமக்கு இந்த ஊர் லாயக்குப்படாது என்று தீர்மானித்து. டவுனோடு குடியேறி விட்டார்கள்.

“குப்பை செத்தையை எல்லாம் காற்று வாரிக்கிட்டுத் தான் போகும். போறவங்க போகட்டும்” என்று முத்து மாலை பிரிவுபசாரம் கூறினான். தன்னைப் பழித்த பெரியப்பனை பழிக்குப் பழி தீர்த்து விட்டதாக ஒரு சந்தோஷம் அவனுக்கு.

இதெல்லாம் தங்கராசுக்குத் தெரியாது. முத்து மாலை படிப்புக்குக் கும்பிடு போட்டு விட்டது வரையில் தெரியும். அதன் பிறகு அவன் இந்த ஊரில் இல்லை. படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அவன் நகரத்தில் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்ந்து விட்டான். பிறகு காலேஜ் படிப்பு. லீவு நாட்களில் ஊருக்கு வந்தாலும், முத்துமாலையைப் பற்றி அவன் அக்கறை கொண்டதில்லை.

படிப்பு முடிந்ததும், அவனுக்குப் பண பலமும் தகுந்த ஆள் பலமும் இருந்ததால், வடக்கே ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்துவிடவே ஊரை விட்டுப் போனான். பிறகு நல்ல இடத்தில் கல்யாணம். இப்படியாக அவனுடைய அந்தஸ்து உயர்ந்தது. வெளியூர் சஞ்சாரங்கள் மிகுந்ததால், சொந்த ஊருக்கு வர வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்கான காலமும் கிட்டவில்லை.

பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்போதான் வந் திருக்கிறான். ஊர் விசேஷங்களை எல்லாம் பற்றிச் சிறிது சிறிதாக விசாரிக்கையில் முத்துமாலையின் பிரதாபமும் தெரிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/23&oldid=1138959" இலிருந்து மீள்விக்கப்பட்டது