பக்கம்:இருட்டு ராஜா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28இருட்டு ராஜா

 மாகி ஒருத்தி வீட்டோடு வந்திட்டா, பையன் தங்கக்கம்பி ஆயிருவான்னு அவளுக்கு நெனப்பு. அவன் எடுத்த எடுப்புக்கு அது நடக்கிற காரியமா? அதுனாலேயும் அவ நெஞ்சு வேகலேன்னு சொல்லு!”

“ஐயோ பாவமே!” என்றான் தங்கராசு.

“அதுக்காக இவன் வருத்தப்பட்டான் கிறியா? அது ஏது! கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு எத்தனையோ வீடுக; அதுமாதிரி தாலி கட்டினவனுக்கு ஒரு பெண்டாட்டி, தாலி கட்டாதவனுக்கு எத்தனையோ பெண்டாட்டிகள்னு எக்காளம் கொழிச்சான். பிறகு, கெட்டலைஞ்ச கழுதை எதையோ தேடிப் புடிச்சு தொடுப்பு வச்சுக்கிட்டான்” என்று கரித்து கொட்டினாள்.

“அட, அது யாரு அவ? எந்த ஊர்க்காரியோ?”

இத்தனை நேரம் பேசியதே ரொம்பப் பெரிசு. ஏக தாராளம் என்று அம்மா எண்ணி விட்டாள். “எந்த நாயி எப்படிப் போனா நமக்கென்ன! கண்டவன் கதையை எல்லாம் பேசிக்கிட்டிருந்தா நம்ம சோலி என்னாவறது?” என்று சொல்லியவளாய் அடுப்படிக்குள் புகுந்து கொண்டாள்.

முத்துமாலை இன்ட்ரஸ்டிங் கேரக்டர்தான்னு தோணுது என்று எண்ணினான் தங்கராசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/30&oldid=1138973" இலிருந்து மீள்விக்கப்பட்டது