பக்கம்:இருட்டு ராஜா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30இருட்டு ராஜா

 காக அப்படிச் செய்திருக்கலாம். பிறகு போகப் போக அவன் யார் வம்புக்கும் போவதில்லை.

வந்த வம்பையும் விடமாட்டான். சில சமயங்களிலே அவன் மனசுக்கு நியாயம்னு படலேன்னு சொன்னா, அநாவசியமா மத்தவங்க வம்பிலே கூடத் தலையிடுவான்...

அப்படித்தான் ஒரு சமயம், கோயில் மாந்தோப்புக் குத்தகைக்காரன் ஒரு சின்னப் பையனிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டான். சில சிறுவர்கள் சேர்ந்து கொண்டு மாமரத்தில் கற்களை எறிந்து மாங்காய்களைத் தட்டியிருக்கிறார்கள். குத்தகைக்காரன் வருவதைக் கண்டதும் பையன்கள் சிட்டாய் பறந்தார்கள். ஆனால் ஒரு பையன் மாட்டிக் கொண்டான். அவன் மடியில் ஒரு மாங்காயும் இருந்துவிட்டது பாவம்.

அவன் ஒரு ஐயர் பையன். குத்தகைக்கார முரடன், அவனை உருட்டி மிரட்டினாலும் அடித்து உதைத்தாலும் தட்டிக் கேட்பதற்கு யாரும் கிடையாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தான். இந்தப் பையனைப் பயமுறுத்துவதன் மூலம் மற்ற சிறுவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஆசைப்பட்டான்.

சிறுவன் கைகளில் நல்ல ‘பொச்சக் கயிரை’ கட்டி அவன் கால்களையும் கட்டி, அவனைக் கிணற்றினுள் இறக்கத் திட்டமிட்டான். எல்லாம் வேடிக்கை பார்க்க வாங்க என்று உற்சாகமாகக் கூவி, கும்பல் சேர்த்தான். பையன்கள், பெண்கள் பெரிய ஆட்களாகப் பலர் கூடிவிட்டார்கள். கல்லெறிந்து விட்டு ஓடிய சிறுவர்களில் அநேகர் கூட பம்மிப் பம்மி வந்து கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து நின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/32&oldid=1138978" இலிருந்து மீள்விக்கப்பட்டது