பக்கம்:இருட்டு ராஜா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44இருட்டு ராஜா

 இதர பெண்களுக்கும் விளையாட்டு குஷி. எல்லோருமே பன்னிரண்டு, பதின்மூன்று வயசுக்குட்பட்டவர்கள் தான் வேடிக்கை பார்க்கும் துடிப்பில் அவர்கள் சந்தோஷம் அதிகரித்தது.

திரிபுரம் கைகளை நீட்டி முத்துமாலையைப் பிடித்து விட்டாள். “ஆ,புடிச்சாச்சு” என்று சொல்லி, இரண்டு கைகளாலும் பற்றினாள்.

“ஆமா புடிச்சாச்சு” என்று சொல்லி அவளை நன்றாகச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.

ஒரே கூச்சலும், கைதட்டலும், குலவையுமாக ஏக கலாட்டா. “அஞ்சு மூணும் எட்டு-அத்தை மகளைக் கட்டு!” என்று சில பெண்கள் ராகம் போட்டார்கள்.

திரிபுரசுந்தரி முத்துமாலைக்கு அத்தை மகள் தான். அந்த உரிமையில் தான் அவன் துணிச்சலாக அவளிடம் ரகளை பண்ணி வந்தான்.

அவள் இதற்குள் கண்ணைக் கட்டியிருந்த துணியை. அவிழ்த்தெறிந்தாள். நிலையை உணர்ந்து திமிற விடுபட்டாள். அவள் முகம் வெட்கத்தாலும் கோபத்தாலும் செக்கச் சிவந்துவிட்டது. அவள் நல்ல சிவப்பு. ஆத்திரத்தோடு பழிப்புக்காட்டி “வவ்வவ்வே” என்றாள்.

“பெயினண்கள் விளைனளையாடுற இயினடத்திலே, தயினடி மாயினடு புயினகுந்து வியினட்டது!” என்று. கத்தினாள். எயினருமை மாயினடுகள்!” என்றும் சொன்னாள்.

பெண்கள் தங்களுக்குள் “குழுஉக்குறி” வைத்துப் பேசினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் முதல், எழுத்துக்குப்பிறகு அநாவசியமான இரண்டு எழுத்துக்களை அடுக்கி, வேகமாகப் பேசுவார்கள். கேட்கிறவர்களுக்கு. ஏதோ புது பாஷை போல் ஒலிக்கும் அது. பழக்கம் இல்லாதவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/46&oldid=1139010" இலிருந்து மீள்விக்கப்பட்டது