பக்கம்:இருட்டு ராஜா.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52இருட்டு ராஜா
 

 வெளிச்சமாத்தானிருக்கு உள்ளுக்குள்ளே, ரொம்பவும் டல் அடிச்சுப் போயிருக்கும்கிறது நெருங்கிப் பார்த்தால் தான் தெரியுது அவன் மனம் பேசிக்கொண்டது.

‘நல்லவள ஒருத்தி வந்து சேர்ந்ததும் முத்து மாலை அதிர்ஷ்டம் தான்’ என்றும் எண்ணினான் அவன்.

அவள் வந்து சேர்ந்த கதையைப் பின்னர் தங்கராசு தெரிந்து கொள்ள முடிந்தது. ஒருவன் விஸ்தாரமாகச் சொன்னான். முத்துமாலை சொல்லியிருந்ததைத்தான் அவன் சொன்னான்.

ஒரு முக்கிய அலுவலாக ஏதோ ஒரு ஊருக்குப்போய் விட்டு முத்துமாலை ராத்திரி ரயிலில் வந்து இறங்கினான். பத்தரை மணி.

ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல் துாரம் நடக்க வேண்டும் ஊருக்கு ஆள் நடமாட்டம் இராத, வழியில் வீடுகள் குடியிருப்பு எதுவும் இராத, விளக்குகள் இராத பாதை ரஸ்தாதான்.

மற்றவர்களானால் ராத்திரி வேளையில், தனியே அந்த வழியாக வர பயப்படுவார்கள். வழியில் ஒரு ஒடை உண்டு. அந்த ஒடை பள்ளத்தில், பாலத்தடியில் திருடர் பதுங்கியிருப்பர். ரோட்டில் வருகிற ஆட்கள், வண்டிகளை மறித்து வழிப்பறி செய்வர் என்ற பேச்சு வெகு காலமாக நிலை பெற்றிருந்தது. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதாக இடைக்கிடை செய்திகள் எழுவதும் வழக்கம்தான்.

கையில் பணம்,பொருள் எதுவும் எடுத்துவராதவனை வழிமறித்தால், அவனிடம் ஒன்றுமே இல்லை என்று கண்டு கொண்டதும் ஏண்டாஒண்னுமே எடுத்துவராமே வந்தே என்று இரண்டு அறைகொடுத்து அனுப்புவார்கள் திருடர்கள்; அப்படிச் செய்துமிருக்கிறார்கள் என்றும் ஊரில் பேசிக் கொள்வது வழக்கம்.