பக்கம்:இருட்டு ராஜா.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்55
 

 அவன் ஒரு எத்தன், குடி கெடுப்பவன். எத்தனையோ பெண்களை வஞ்சித்து, தான் பணமும் சுகமும் தேடிக் கொண்டிருப்பவன். அதெல்லாம் அவளுக்கு பிற்பாடுதான். தெரிந்தது. சகுனி மாமா அவளை நேரே மதுரைக்கு அழைத்துப் போகவில்லை. கன்னியாகுமரிக்குக் கூட்டிப் போனான். அங்கே அவளிடம் பசப்பி மயக்கி, அவளை உபயோகித்தான். அவனே தன்னைக் கட்டிக்கொள்வான் என்று தான் அவள் முதலில் நம்பினாள். ஏமாந்தாள்.

கிழவன் மாதிரி இருந்த எவனோ ஒருவனிடம் மாமா அவளை ஒப்படைத்தான். “நான் உன் அம்மாவிடம் கூறிய ஆள் இவர்தான், இவர் உன்னை நல்லபடியா வச்சுக்கிடுவார்; இவருக்கு நல்லவளாக நடந்து கொள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அந்த ஆளிடம் மாமா கணிசமாகப் பணம் வாங்கியிருந்தான் என்பதை அவன் சொல்லி அவள் தெரிந்து கொண்டாள்.

அவனும் நம்பகமானவன் அல்ல என்று அவள் சந்தேகித்தாள். இரண்டு மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் தங்கியபிறகு, அவன் அவளை அழைத்துக் கொண்டு. குற்றாலம் போனான். பிறகு திருச்செந்துாருக்கு வந்தான். மதுரை போகலாம் என்று ரயிலேறினான் அவளோடு.

இவனும் மாமா மாதிரி தன்னை வேறு எவனுக்கோ விற்றுவிடத் திட்டமிட்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. ஆகவே, அவனிடமிருந்து தப்பி ஓடுவதற்கு அவள் பிளான் பண்ணிக் கொண்டேயிருந்தாள்.

ரயிலில் அவன் அயர்ந்து தூங்கிவிட்டான். சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவள் இந்த ஸ்டேஷனில் ரயில் நின்றதும் ஒரு ஆள் இறங்குவதைக் கண்டதும், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து இறங்கிவிட்டாள்.