பக்கம்:இருட்டு ராஜா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்67

 களைத்துச் சோர்ந்து போன அப் பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள். “ஐயா சாமி! நாங்க ஆடமாட்டோமின்னு சொல்லலே. இதுவரை ஆடி ஆடி ஒரே களைப்பாயிருக்கு. கிறுகிறுன்னு வருது. ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்பாலே ஆடுறோம்” என்று பணிவாகச் சொன்னார்கள். அவர்களது குரலே அழுவது போல் தானிருந்தது.

“ஏயம்மாடி, ரெஸ்டாமில்லே... இவொளுக்கு. ரெஸ்டு, அதுவும் ஒரு மணி நேரமில்லா வேணுமாம்!” என்று ரகளைக்கார வாலிபர்கள் கேலி பேசினார்கள்.

அந்தப் பக்கமாக வந்த முத்துமாலை ஆட்டக்காரிகள் கெஞ்சியதையும், வாலிபப் பையன்களின் பேச்சையும் கேட்டான். முன்னே வந்து, “ஐயா தம்பிமாருகளா நீங்க ஒரே அடியா ஆட்டத்தை ரசிச்சுப்போடாதீங்க. வில்லுப் பாட்டு நாதஸ்வரம் இதுகளையும் ரசிக்கப்போங்கடே. அந்தப் பொண்ணு சொல்றதும் நியாயம் தானே? அவங்களும் மனுசப் பிறப்பு தானே. மிஷினு இல்லையே ஒய்வுதேவையின்ணு கேட்கிறதிலே என்ன தப்பு? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்பாலே ஆடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களோ இல்லையோ பாவம்” என்று கூறினான்.

பெண்கள் அவனைப் பார்த்து வணங்கினார்கள். சரி முதல்லே டீ குடியுங்க. அப்புறம் உங்களுக்கு எங்கே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோ அங்கே போயி சாப்பிடுங்க” என்றான். அவனே டீ வாங்கிக் கொடுத்தான்,

“நன்றி, அண்ணாச்சி” என்று கூறிக் கும்பிட்டார்கள் அவர்கள்.

அவன் தலையை ஆட்டிக் கொண்டே நகர்ந்தான். அவனைத் தேடிச் சில பேர் வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/69&oldid=1139127" இலிருந்து மீள்விக்கப்பட்டது