பக்கம்:இருட்டு ராஜா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்69

 ஊதறது நிக்கறதுன்னு நேரம்போக்குறானே தவிர வாங்கின பணத்துக்கு நியாயம் பண்ணுறவனா இல்லே. என்ன ஐயா, வாசிக்காமலே பொழுதை ஊட்டிக் கிட்டு வாரீகளேயின்னு ரெண்டு பேரு கேட்டாங்க. அவன் தங்கப் பல்லு டல் அடிக்கும்படி ஒரு சிரிப்பு சிரிச்சான். ஹே, இந்த ஊரு ரசிக மகாஜனங்க நிறைந்தசபை அதுக்கு இந்த வாசிப்பு பத்தலையாங்காட்டியும்?” என்று விண்ணாரம் கொழிச்சான்.

“ஐயா நீங்க வாசிக்கிறதை வாசிச்சா கேட்கிற வங்க கேட்டிட்டுப்போறாங்க, ரசிக்கத் தெரிஞ்சவங்க ரசிக்கிறாங்க. நீங்க வாசிக்காமலே, ஆடாத சதிர்த்தாசி மாதிரி சும்மா தளுக்கி மினுக்கிக்கிட்டுப் பொழுது போக்கினா என்ன அர்த்தம்? வாங்கின பணத்துக்காவது சரியானபடி ஊதனுமில்லே?” என்று ஒரு பெரியவர் முறைத்தார்.

அவன் மறுபடியும் ஹேங் என்று ஏளனமாக நகைத் தான். “பணம்! மகாப் பெரிய சம்மானம் அள்ளிக் கொடுத்திட்ட மாதிரித்தான். இந்த ஊருக்கு இவ்வளவு போதும்” என்று அலட்சியமாகப் பேசினான்.

“தண்ணி தாராளமாவே உள்ளே போயிருக்கும் போலிருக்கு?” என்றான் முத்துமாலை. மற்றவர்களோடு நாதசுரக்காரன் நின்ற இடத்துக்குப் போனான்.

அப்போது அம்மன் புறப்பாடு ஆரம்பித்திருந்தது. சன்னிதியை விட்டு சப்பரம் வெளியே வந்தாச்சு. நாதசுரக்காரன் வெறுமனே குழலை அலங்காரமாகப் பிடித்தபடி, பகட்டாக நின்றான். சிறிது வாசித்தான். பிறகு மவுனமானான்.

சப்பரம் முக்கியமான இடத்தில் வந்து நின்றது. “நாதசுரம் நாதசுரம்!” என்று குரல்கள் எழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/71&oldid=1139332" இலிருந்து மீள்விக்கப்பட்டது