பக்கம்:இருட்டு ராஜா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72இருட்டு ராஜா

 கோயில் பிரகாரத்திலும் சன்னிதியிலும் ஆட்களே இல்லை. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வெளிச்சம் வெறுமையை நன்கு எடுத்துக் காட்டியது.

வெறுமை இல்லை என்று திடீர் அழுகைக் குரல் அவனுக்கு உணர்த்தியது. ஒரு குழந்தை பதறி அழுதது.

அவன் கவனித்தான்.

ஒரு ஒரத்தில் படுத்துத் தூங்கிக் கிடந்த குழந்தை பதறி விழித்ததும், தனிமையைக் கண்டு அஞ்சி அலறியது.

அவன் அதன் அருகில் போனான். யார் குழந்தை? யார் வீட்டைச் சேர்ந்தது? அவனுக்கு விளங்கவில்லை. சட்டையும் பாவாடையும், கழுத்தில் கிடந்த டாலர் செயினும், குழந்தையின் ஆரோக்கியமான உடம்பும், அது வசதியான வீட்டில் வளரும் பிள்ளை என விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. அவ்வூரில் யார் வீட்டிலும் அந்தப் பிள்ளையைக் கண்டிருப்பதாக அவனுக்கு ஞாபகமில்லை. வெளியூரிலிருந்து வந்த குழந்தையாக இருக்க வேண்டும். கொடைக்கு எவர் வீட்டுக்காவது வந்திருக்கக் கூடிய உறவினர் ஒருவரது மகளாக இருக்கலாம் என்று எண்ணினான்.

யாராக இருந்தாலும் சப்பரத்தின் அருகேதான் நிற்பார்கள். குழந்தையை எடுத்துப் போனால் அவர்கள் கண்டு கொள்வார்கள்; குழந்தையே கண்டு பிடித்தாலும் கண்டு பிடித்துவிடும் என்று முடிவு செய்தான்.

அதன் அருகேபோய், “பாப்பா ஊங்கிட்டியா?சாமி பார்க்கப் போலமா? அம்மா அங்கேதான் இருக்கா” என்று அன்பு கணியும் குரலில் பேசினான்.

குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். தூக்கிக் கொள்ளும்படி கைகளை முன்னே நீட்டி உயர்த்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/74&oldid=1139347" இலிருந்து மீள்விக்கப்பட்டது