பக்கம்:இருட்டு ராஜா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74இருட்டு ராஜா

 “ஒ, மாம்பயம் எனக்குப் பிடிக்குமே. இனிச்சுக்கிடகும். நீ வாங்கித் தாயியா மாமா?” என்று இனிமையாகப் பேசியது குழந்தை.

அவன் ஒரு திருப்பத்தை நெருங்கும்வேளை. அதே திருப்பத்தில் இரண்டு பேர் வேகம் வேகமாக வந்தார்கள். பெண்கள் கூட ஒரு சிறுமியும் ஓடி வந்தது.

குழந்தையின் பேச்சைக் கேட்டும், எதிரே வந்தவர்களைக் கண்டும், ஒருத்தி முன்னே பாய்ந்தாள். “இந்தா இருக்கு புள்ளெ. அம்மாடி, என் வயித்திலே பாலை வார்த்தே” என்று கூறி அவசரமாகக் கைகளை நீட்டினாள்.

“அம்மா!” என்று பாய்ந்தது குழந்தை. “அக்கா என்னை விட்டுட்டுப் போயிட்டா” என அழத் தொடங்கியது.

அவளைப் பார்த்து திகைத்துப் போய் நின்றான் முத்துமாலை. திரிபுரசுந்தரி! ஒ, இந்தப் பெயரைத் தான் குழந்தை அப்படிச் சொல்லியிருக்கிறது. எனக்கு அது புரியவில்லையே! எப்படிப் புரியும்? இவளை யார் இந்த ஊரில் இன்று எதிர்பார்த்தது!

“வா திரிபுரம், செளக்கியம்தானா?” என்று கேட்டான் முத்துமாலை.

குழந்தையை இழந்திருந்த பதட்டம். அது திரும்பக் கிடைத்து விட்ட பரபரப்பு, கழுத்திலே காதிலே கை கால்களிலே போட்டிருந்தவை எல்லாம் அப்படி அப்படியே இருந்த ஆனந்தம்—இப்படிப் பல ரக உணர்ச்சிகளினாலும் தன்னை மறந்த நிலையில் இருந்த திரிபுரம் இப்போது தான் அவனை கவனித்தாள்.

“ஒ நீங்களா!” என்றாள். “பிள்ளை எங்கே இருந்தது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/76&oldid=1139354" இலிருந்து மீள்விக்கப்பட்டது