பக்கம்:இருட்டு ராஜா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்75

 “புள்ளை சுகமா ஒத்தையிலே படுத்துத் தூங்கிக் கிட்டிருந்தது. திடுக்கிட்டு முழிச்சு, பதறி அழுதது. நல்ல வேளையா நான் அந்தப் பக்கமா வந்தேன். வேறு யாரும் வந்திருந்தா என்ன ஆகியிருக்குமோ? திருவிழாக் கூட்டத்திலே யாரு எவருன்னு என்னத்தைச் சொல்ல முடியும்? கழுத்திலே சங்கிலி, காதுகளிலே ஜிமிக்கி, கைகளில் வளையல், கால்களில் கொலுசு எல்லாம்போட்டு பிள்ளையை இப்படித்தான் அலட்சியமா விடுறதாக்கும்?” குறை கூறும் தொனியில் பேசினான் அவன்.

“இந்தப் புள்ளை மங்கை கூடவே இருந்தது” என்று தன் அருகில் நின்ற சிறுமியைக் காட்டினாள் திரிபுரம், “விளையாடி அலுத்த மங்கை துாங்கிப் போயிருக்கு. சப்பரம் புறப்பட்ட பரபரப்பிலே நாங்க எல்லோரும் போயிட்டோம். இந்தப் புள்ளையும் வந்துட்டுது. மங்கை நினைப்பு யாருக்கும் வரலே. அந்தத் தெருவிலே பாதி தூரம் போனதும் தான், மங்கையை காணோமேன்னு கேட்டேன். இந்தப் புள்ளையைச் கேட்டா, அது என் கூட வரலியேன்னு கையை விரிக்குது. பிறகு என்ன ஏதுன்னு விசாரிச்சா, அது கோயில்லே தூங்கிட்டுது; அப்புறம் நான் கவனிக்கலேன்னு சொல்லுது. எனக்கானா பயம். குலை நடுங்கிப் போச்சு. ஐயோ, புள்ளைக்கு எதுவும் ஆகியிராம இருக்கனுமேன்னு கும்பிட்டுகிட்டு, இந்த அக்காளையும் துணைக்குக் கூட்டிக்கிட்டு, ஒடியாறேன். இந்தப் புள்ளையும் எங்களோடவே ஒடியாந்தது. நல்ல வேளை, நீங்க கடவுள் மாதிரி குழந்தையைப் பாதுகாத்து எடுத்துக்கிட்டு எதிரே வாறீங்க” என்று சொல்லி முடித்த திரிபுரம், குழந்தையைக் கொஞ்சலானாள். “பயந்துட்டியாடா ராஜா? ரொம்ப பயந்துட்டியாடா!”

“இல்லே. அதுக்குள்ளாய இந்த மாமா வந்துட்டா. நல்ல மாமா” என்றது குழந்தை.

திரிபுரம் முழுதலர்ந்த முகத்தோடு அவனைப் பார்த்தாள். புன்னகை பூத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/77&oldid=1139357" இலிருந்து மீள்விக்கப்பட்டது