பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அவ்வூரின் சிறப்பாகத் திகழ்ந்த பள்ளிக்கூட ஆண்டு விழாவின் இரவிலே, நாடகத்தில் நடித்து புகழ் பெற்ற மாணவி குமாரி பவானி பள்ளிக்கூடத்தை விட்டுக் கிளம்பியவள் வீடு போய்ச் சேரவேயில்லை.

'இப்ப வருவாள்; இதோ வந்து விடுவாள்; வாரமலா போவாள்' என்று தெரு வாசலையும் வீட்டுக் கடியாரத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்களுக்கு 'பக்குப் பக்கென்று' தானிருந்தது. இரவிலே மணி பன்னிரண்டரையாகியும் பதினாறு வயது மகள் வீடு வந்து சேரவில்லை யென்றால் அவர்களது உள்ள நிலை வேறு எப்படியிருக்கும்!

பொறுமை யிழந்த அவர்கள் அங்குமிங்கும் ஆட்களை அனுப்பினார்கள். தந்தையும் தாயும் பவானியின் நெருங்கிய சிநேகிதிகளின் வீடுகளுக்குப் போய் விசாரித்தார்கள். பலனில்லை.

'பவானி இன்னும் வரலே? அவதான் நாடகம் முடிந்த உடனேயே வீட்டுக்குக் கிளம்பிவிட்டாளே.. பெரிய தெருவைத் தான்டி அவள் திரும்பியதைக் கூடப் பார்த்தேனே' என்றெல்லாம் பலரும் சொன்னார்களே தவிர கடைசியாக அவளை எங்கே யார் பார்த்தது என்று திட்டமாகக் கூறுவாரில்லை.

சில லேடிவால்கள் மட்டும் 'குட்டி எவன் கூடவாவது போயிருப்பாள். விடியட்டுமே, அப்ப வீடு போய்ச் சேர்ந்தால் போதாதா என்று எண்ணியிருப்பாள்' என்று தங்களுக்குள் விஷப் பேச்சு உதிர்த்துச் சிரித்தார்கள்.

விடிந்த பிறாகுக் கூட குமாரி பவானி வந்து சேரவில்லை; அவளைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை என்றதும்தான் அந்த ஊர் 'ஆங், அப்படியா சமாச்சாரம் என்று நிமிர்த்து உட்கார்ந்தது. வழக்கம் போல் வரும் பலவிதமாகப் பேச்சு ஒலிபரப்பினர்கள்.