பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

லட், ஸ்கை புளு, பழுப்பு, பொன்னிறம் என்று அழகழகான வர்ணப் புடவைகள் தேர்த்து வைத்திருந்தாள். நாளுக்கொரு தினுசும், வேளைக்கொரு ஸ்டைலுமாக காட்சி தரும் கட்டழகி அவள். அநாவசியப் பூச்சுமானங்களையும், நகைச் சுமைகளையும் நம்பி வாழவில்லை. அவள். மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றுதான். அவள் கழுத்தை அலங்கரித்துக் கிடந்தது. சதா அவள் கூந்தலில் மலர் குடியிருக்கும். அது மல்லிகைப் பூவாகவுதிருக்கலாம்: இரண்டு இலைகளுடன் அருமையாக விளங்கும் ஒரே ஒரு ரோஜாவாகவுமிருக்கலாம். பச்சை மஞ்சளை முறித்துப் பார்த்தால் பளிச்சிடுவது போல் மின்னும் பொன்னவிா் மேனி அவளுக்கு. மண்ணிலிருந்து தோண்டி யெடுத்த, நன்கு விளைச்சலுற்ற, சீனிக் கிழக்கு மாதிரிக் கட்டுமஸ்தான தேகம் அவளுடையது. ‘தேவகியம்மாவின் சருமத்து மினுமினுப்பு தேங்காயெண்ணெய் தந்த வரப் பிரசாதம். அவள் சதைப் பற்றும் பளபளப்பும் பாதாம் அல்வாவினுலும் பசும் பாலினுலும் ஏற்பட்டவை’ என்று சில வீணர்கள் மதிப்புரை அருளுவது வழக்கம்.

அவ்வூரின் எண்ணற்ற கண்களுக்கு இன்பமளித்தவள் அவள். ஒரு சிலருக்கு மகிழ்வையும் வாழ்க்கைப் பயனையும் விருந்தாகப் படைத்த இன்ப எழிலரசி. அவள் கற்றாளைப் புதரிலே அநாதை மாதிரிச் செத்துக் கிடப்பாள் என்று எந்தப் பிராணியும் எண்ணியிருக்கமுடியாது. ஆனால் அவள் வாழ்க்கை அப்படித்தான் முடிந்தது. காரணம் என்ன?

அது மகத்தான ரகசியமாக - விடுபட முடியாத புதிராகத்தான் இருந்தது. அது கொலேதான் என்று நம்பினார்கள். ஆனால் யார் கொலை செய்தது ; எங்கு எப்படி அவள் கொலை செய்யப்பட்டாள்? இவை போன்ற பல கேள்விகளுக்கு விடை காட்டக் கூடிய தடயங்கள் ஒன்றிரெண்டு கூடத் தென்படவில்லை. போலீசார் வழக்கம் போல் ‘புலன் விசாரித்து'க் கொண்டு தானிருந்தார்கள்.