பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தினந்தோறும் 'பச்சைத் தண்ணீ'ரை ஊற்றி வரவும் அந்தச் செல்லக் குழந்தைகள் பிராணத் தியாகம் செய்து கொண்டன!'ரெண்டுக்கெட்டான்புர' ஜனங்கள் பேசிப்பேசிப் பொழுது போக்கத் தகுத்த விஷயமாயிற்று பங்களாவும் அதில் நடந்த நிகழ்ச்சியும்.

'எனக்கு மட்டும் ஆதியிலேயிருந்தே டவுட்டுதான். முதல் நாள் இந்த ஜம்பம் ஜானுடன் காரிலே வந்த பிக்சர் பியூட்டி இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஆற்று வெள்ளத்திலே பிணமாக அடிபட்டு வந்தாள் என்றால் என்னய்யா அர்த்தம்? ஏதோ மர்மமிருக்குயின்னுதானே...... என்று அளந்தார் பழைய பிரதர். 'ஒய்'நிறுத்துங் காணும். அன்னைக்கு உம்ம வாயிலே கொழுக்கட்டையை வச்சுத் திணிச்சிருந்தீரோ? அப்பவே ரிப்போர்ட் செய்றதுக்கு என்ன கொள்ளை? சுத்தப் பயந்து எருவி அண்ணுவி பேசாமப் பம்மிப்போட்டு இப்ப வந்து பிரபாதம அளக்கியே, சீ போ!' என்று எரிந்து பிரதரை வாயடைக்க வைத்தார் ஒரு பெரியவர். ஆற்றங்கரைத் தோப்பு நடுவே சமாதி போலிருந்த பங்களா மறுபடியும் இருளடைந்த ஸ்தலமாக மாறிவிட்டது. பகலில் கூட அதனருகிலே போக அவ்வூர்க்காரர்கள் பயப்பட்டார்கள். ஆகவே, ஆந்தைகளும் வெளவால்களும் யாரிடமும் மனுச் செய்து கொள்ளாமல், லைசென்ஸ் பெறாமலே, இந்த இருண்ட பங்களாவைத் தங்கள் சொந்த வீடாக உரிமை கொண்டாடி ஆரவாரித்தன.