பக்கம்:இரு விலங்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

25


காணும் விருப்பத்தை உண்டாக்குவதற்கு அடையாளப் பொருளாகப் படம் உதவுகிறது.

விக்கிரகங்கள்

 துபோல் சோதிமயமாக இருக்கும் ஆண்டவனு டைய திருவுருவத்தை அகக் கண்ணினாலே பார்ப்ப தற்குமுன் திருக்கோயில்களில் உள்ள திருவுருவத்தைக் கண்டால் சிறிதே உள்ளத்தில் பக்தி எழுகிறது. அந்தப் பக்தி வளர வளர, அகக்கண்ணில் தியானம் செய்யத் தொடங்குகிறான். அது வளர்ந்தால் இறைவனை உன்முகக் காட்சியில் பார்க்கிற நிலை உண்டாகும். கோயிலில் காணும் திருவுருவத்தைப் புறக் கண்ணால் கண்டதோடு நிற்காமல் அகக் கண்ணில் வைத்துத் தியானம் செய்து பழகவேண்டும். அதுதான் அநுபவம் வளர்வதற்குரிய வழி. மன ஒருமைப்பாட்டோடு புறத்தில் கண்ட உருவத்தை மெல்ல மெல்லத் தியானம் செய்தால் அதுவே சோதி வடிவமாகக் காணுகின்ற இன்ப அநுபவத்தைப் பெறுவதற்குத் துணையாக இருக்கும். இந்தத் தியானத் தைப் பெரியவர்கள் பழகுவதனால், அவர்களுக்கு ஆண்ட வன் உருவம் உடையவனாக இருப்பதால் உண்டாகிற பலன் நன்றாகத் தெரிகிறது. 

பேரழகன்

 முருகப்பெருமான் அழகே திருவுருவமாக அமைந் திருக்கிறவன். கண்ணைக் கவ்வும் பேரழகன். கண்வழி யாகக் கருத்தைக் கொள்ளை கொள்ளும் மோகன சொரூ பன். சூரபன்மன் கூட அவனுடைய திருவுருவத்தைக் கண்டு,
 "ஆயிரம் கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி 
  மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில் 
  தூயநல்லெழிலுக்காற்றாதென்றிடின் இனையதொல்லோன் 
  மாயிருவடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்"

என்று வியந்து கூறியதாகக் கந்தபுராணம் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/47&oldid=1402462" இலிருந்து மீள்விக்கப்பட்டது