பக்கம்:இரு விலங்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



iv

 அவரைப் பார்க்க வந்தவர் பக்திமானாகவோ, ஞான நெறியில் நிற்பவராகவோ இருந்த விட்டால், அவரிட மிருந்து வரும் வார்த்தைகளில் எத்தனையோ உண்மைகளைக் காணலாம். வந்தவர் பாரமார்த்திகத் துறையில் அடி யெடுத்து வைத்து அநுபவம் சிறிது வாய்ந்தவரானால், வந்தவரிடம் தம்முடைய அநுபவங்களையும் சொல்ல முற் படுவார். அப்போது அவருடைய பேச்சில் உரம் ஏறும்; சாரம் மிகும். அவர் கண்ணின் ஒளி அப்போது விட்டு விளங்கும். திடீர் திடீரென்று சிரிப்பார். சிரிக்கும் போதே கண்ணீர் வரும். கண்ணீரும் களிப்பும் ஒருங்கே பொங்கு வதைத் தெளிவாகக் காணலாம். 
 அவரைப் பக்தர் எ ன்று ம் சொல்லலாம்; ஞானி யென்றும் கூறலாம். இரண்டும் ஒன்றுதான் என்பதைக் காட்டும் துறவி அவர். ஆம், அவர் துறவிதான். அவருக்குக்குடும்பம் இல்லை சாதி இல்லை. குலம் இல்லை. சமயம் இல்லை என்றுகூடச் சொல்லி விடலாம். அடிக்கடி முருகா என்று சொல்வார். ஆனால் அபிராமி அந்தாதியைப் பாடிக் களிப்பார். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி இன்புறுவார், தேவாரத்தில் தி ளைப்பா ர். அலங்காரமும் அநுபூதியும் அவருக்கு மிகவும் விருப்பமானவை. நல்ல பாட்டு, நல்ல இயற்கைக் காட்சிகள், நல்ல ஓவியம், நல்ல மனிதர்கள்-அவருக்குப் பிடித்தமானவை இவை.
 வெவ்வேறு மூர்த்திகளைப் பற்றிய பாடல்களில் ஒரே மாதிரி உள்ளத்தைப் பதிக்கும் இயல்பு விசித்திரமாகத் தோற்றலாம். ஆனால் அவர் பார்க்கும் பார்வையே வேறு. பாடல் யாரைக் குறிக்கிறது என்று அவர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பாடினவர் நிலை என்ன, அவர் தம் அநுபவ நிலையை எவ்வாறு பாட்டில் காட்டி யிருக்கிறார் என்பதைப் பார்க்கிறவர் அவர். அதனால் ஆழ்வார் பாடலும், அபிராமி பட்டர் பாடலும், மணிவாசகர் பாடலும், அருணகிரிநாதர் பாடலும் ஒரே அநுபவத்தை வெவ்வேறு வகையாகச் சொல்கின்றன என்ற உண்மையை அவர் உணர்கிறார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/6&oldid=1296527" இலிருந்து மீள்விக்கப்பட்டது