பக்கம்:இரு விலங்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

39


லாவது சென்று காணலாம். அதற்குரிய முயற்சி நமக்கு வேண்டும். அந்த முயற்சிக்கு ஏற்ற கருவிகள் நம்மிடத்தில் இருக்கின்றன. அவன் உள்ள தலத்திற்குச் செல்வதற்குக் காலும், அவன் திருக்கோலத்தைக் காண்பதற்குக் கண்களும், தொழுவதற்குக் கையும் இருக்கின்றன என்ற எண்ணங்கள் இந்தப்பாட்டினால் நமக்கு உண்டாகின்றன.

மாலோன் மருகனை மன்றாடி
மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியில்
சேல்ஆர் வயற்பொழிற் செங்கோ
டனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரம்கண் படைத்தில
னேஅந்த நான்முகனே!

[திருமாலுக்கு மருமகனை, அம்பலத்தில் ஆடுகின்ற சிவ பெருமானுக்கு மகனை, தேவர்களுக்கெல்லாம் மேம்பட்டு விளங்கும் தேவனை, மெய்யறிவே வடிவான கடவுளை, இந்த உலகில் சேல்மீன்கள் நிறைந்த வயல்களையும் சோலைகளையும் உடைய திருச்செங்கோட்டில் உள்ள முருகனைச் சென்று தரிசித்துத் தொழுவதற்கு ஏற்றபடி நாலாயிரம் கண்களை அந்தப் பிரமன் படைத்தானில்லையே!

மா லோ ன் - பெருமையையுடையோன்; கரியவன் என்றும் சொல்லலாம். வயலையும் பொழிலையும் உடைய செங்கோடு. செல்லுதலும் காணுதலும் தொழுதலும் அடுத்தடுத்து நிகழ்தலின் அம்முறையிற் சொன்னார். அந்த உலகறி சுட்டு. அடியேன் என்ற எழுவாய் எஞ்சி நின்றது: அடியேன் தொழ, நான்முகன் படைத்திலனே.]

முருகன் பேரழகுடையவன் என்பது இப்பாட்டின் கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 90-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/61&oldid=1402471" இலிருந்து மீள்விக்கப்பட்டது