பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

இறுமாப்புள்ள இளவரசி


குடிசையின் பக்கம் வந்து சேர்ந்தனர். "என்னை ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வருகிறாய்?" என்று இளவரசி கேட்டாள். "இதுவரை இது என் வீடாக இருந்தது, இனி இது உன் வீடு! " என்று கணவன் கூறினான். அவள் அழத் தொடங்கினாள். ஆனால், களைப்பும் பசியும் அதிகமாயிருந்தமையால், அவள் அவனுடன் உள்ளே சென்றாள்.

அந்தோ! அந்தக் குடிசையில் உணவருந்த மேசை எடுத்துப் போடுவாரில்லை; குளிர் காயும் கணப்பை முட்டுவாரில்லை. எல்லா வேலைகளையும் இளவரசியே செய்ய வேண்டியிருந்தது. கணப்பு மூட்டவும் உணவு சமைக்கவும் வீட்டைச் சுத்தம் செய்யவும் - எல்லாம் அவளுடைய பொறுப்புகளாயின. மறு நாள் அவள் கணவன் பஞ்சு நூலில் செய்திருந்த முரட்டுத் துணிகளை அவளுக்கு ஆடைகளாகக் கொடுத்தான். தலையில் கூந்தலை மறைத்துக் கட்டிக்கொள்ளவும் அவைகளில் ஒரு துண்டை எடுத்தளித்தான். அவள் வீட்டு வேலைகளை முடித்து விட்டுச் சிறிது நேரம் சும்மா அமர்ந்திருக்கையில், அவன் எங்கிருந்தோ பிரம்புக் கொடிகள் அறுத்து வந்து, அவைகளை இருவருமாகக் கிழித்துக் கூடைகள் முடைய வேண்டுமென்று தெரிவித்தான். எந்த வேலையும் செய்தறியாத அவளுடைய மலர் போன்ற கைகள் பிரம்புகளைக் கிழிக்கும் பொழுது அவைகளில் உதிரம் வடிந்தது. பிறகு, அவன் தன் கிழிந்த துணிகளைத் தைத்து வைக்கும்படி கோரினான். ஊசி அவள் கைவிரல்களிலே பல இடங்களில் குத்திவிட்டது. அவனும் அவளிடம் இரக்கம் கொண்டு, அவளை வேறு வேலை செய்யும்படி ஏவினான். ஒரு கூடையில் மண் பாண்டங்களை நிரப்பி, அதைத் துக்கிக்கொண்டு சந்தையிலே போய் விற்று வரும்படி சொல்லி அவளை அனுப்பினான். அரசர் மகள் இப்படிப் பானை சட்டிகளைத் துக்கிச் செல்வது அவமானமாய்த்தான் இருந்தது. மாந்தளிர் போன்ற அவள் மேனிக்கும், தலையிலே சும்மாடு கட்டிக் கூடை சுமப்பதற்கும் நேர்மாறாகவே தோன்றிற்று. ஆனால், அவள் இந்த வேலையையும் செய்து தீர வேண்டியிருந்தது.

அதற்கு மறுநாள் அவளை மீண்டும் சட்டி பானைகளுடன் சந்தைக்கு அனுப்பியதில், அங்கே