பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1O
இறுமாப்புள்ள இளவரசி
 
நின்றான். அவனே, முன்னால் இளவரசியால் 'தாடிக்காரர்'. என்று ஒதுக்கப்பட்ட அரசன்! அவன் சமையற்காரியைப் பார்த்து,"உனக்கு உதவியாக வந்துள்ள அழகான புது வேலைக்காரி இங்கே எட்டிப் பார்த்த பிழைக்காக என்னுடன் ஒரு முறை நடனமாட வேண்டும்" என்று சொன்னான். இளவரசி இசைகிறாளோ இல்லையோ என்றுகூடப் பாராமல், அவன் அவள் கரங்களைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்று மண்டபத்தில் நடனமாடத் தொடங்கினான். வாத்தியகார்கள் வத்தியங்களை வாசிக்க நடனம் பிரமாதமாக நடந்தது ஆரம்பத்திலேயே இளவரசியின் சட்டைப்பைகளிலிருந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து விழுந்தன. அவைகளைப் பார்த்து அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் நகைத்தார்கள். அப்பொழுது அரசன் அவளை இழுத்துக்கொண்டு மண்டபத்தின் வெளிப்புறத்தில் ஒரு தனியிடத்தை நாடினான். அங்கே சென்றதும், "என் அன்பே! என்னைத் தெரியவில்லையா உனக்கு? நான்தான் தாடிக்கார அரசன், நான்தான் உன்னை மணந்துகொண்ட பிச்சைக்காரன், நானேதான் சந்தையில் உன் பாண்டங்களை உடைத்த குடிகாரன் ! நான் யாரென்று தெரிந்துதான் உன் தந்தை உன்னை எனக்களித்தார். இவையெல்லாம் உன் இறுமாப்பை ஒழிப்பதற்காக நடந்தனǃ " என்று அவன் தெரிவித்தான். அந்த நேரத்தில் பலவிதமான உணர்ச்சிகள் அவளை ஆட்டிவைத்தன. பயத்தினால் நடுக்கம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், மற்றொரு புறத்திலே ஆனந்தம்! ஆயினும், எல்லாவற்றினும் காதலே மேலோங்கி நின்றதால், அவள் அவன் மார்பிலே தலையைச் சாய்த்துக்கொண்டு ஒரு குழந்தையைப் போல் அழுதாள். உடனே அரண்மனைப் பணிப்பெண்கள் ஓடி வந்து, அவளை அழைத்துச் சென்று பட்டாடைகள் அணிவித்து, நவரத்தினங்களிழைத்த பூண்களையெல்லாம் புனையச்செய்து, மீண்டும் அழைத்துக் கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் அவளுடைய தந்தையாகிய அரசரும், அவருடைய இராணியும் அங்கே வந்து சேர்ந்தனர். மேளதாளங்களுடன் இளவரசிக்கும் இளைஞனான தாடி அரசனுக்கும் முறைப்படி விவாகம் நடந்தேறியது. எல்லோரும் இன்பவெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். அத்தகைய கோலாகலமான திருமணத்தை நாம் இனி எங்கே பார்க்கப்போகிறோம்!