பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது11
 
2. எசமானனும் வேலைக்காரனும்

ரு காலத்தில் தானியேல் என்று ஒரு வாலிபன் இருந்தான். அவனுடைய முழுப்பெயர் பில்லி மாக் தானியேல். அவன் குடிப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் செய்வதில்லை; மது வாங்கப் பணம் இருக்க வேண்டும். அவனுக்கு வேறு கவலையே கிடையாது. குடித்த பிறகு எவர்களுடனாவது கூடி வம்பளப்பது அவன் வழக்கம். குடி வெறியிலிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எவரையும் ஏசுவதும் பட்டென்று அடிப்பதும் அவன் கையாண்டு வந்த முறைகள். இந்த முறைகளால் அவன் எந்தச் சண்டையிலும் ஈடுபடுவான், எந்தச் சண்டையிலிருந்தும் வெளிவந்தும் விடுவான். தீய ஒழுக்கமுள்ள சிலர் அவனுக்குக் கூட்டாளிகளாக இருந்து வந்தனர்.

ஒரு நாள், இரவில் பனி பெய்து குளிர் அதிகமாயிருக்கையில், அவன் எங்கிருந்தோ வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். வானில் வெண்மதி தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்தது. அவன் நிலவைப்பற்றி எண்ணவில்லை. 'இந்த நடுங்கும் குளிரில் உயர்ந்த சாராயமிருந்தால் ஆனந்தமாகக் குடிக்கலாமே! குடித்தால் இந்தக் குளிரெல்லாம் பறந்துவிடுமேǃ' என்று அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

"நீ இரண்டாம் தடவை நினைப்பதற்குள் இதோ கொண்டுவந்திருக்கிறேன், தானியேல்!” என்று சொல்லிக் கொண்டே, குள்ளமான ஒரு மனிதன் ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் மதுவை அவனிடம் கொடுத்தான். அவன் ஏதோ பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனைப் போலக் காணப்பட்டான். அவனுடைய உடைகளில் தங்கச்சரிகை வைத்துத் தைக்கப்பட்டிருந்தது. அவன் அளித்த மது முதல் தரமானது, எவரும் கண்டிராதது, எவரும் பருகியிராதது. அவன் பெரிய இடத்துச் சீமானாகத் தோன்றிய போதிலும், தானியேல் வழக்கம் போல, "அன்புக் குள்ளனே,