பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எசமானனும் வேலைக்காரனும்
13
 தானியேல் வீடு வந்து சேர்ந்தான். அவன் களைத்துச் சோர்வுற்றிருந்த போதிலும், குள்ளனைப்பற்றிய நினைவு அகலாமலே இருந்ததால் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. ஆயினும், குள்ளனுடைய கட்டளையை மீறுவதற்கும் அவனுக்குத் தைரியம் வரவில்லை. ஆகவே, அந்தி மாலையில் அவன் எழுந்திருந்து, நேராகக் கோட்டை மைதானத்திற்குச் சென்றான். அங்கே சிறிது நேரத்திலே குள்ளனும் வந்து சேர்ந்துகொண்டான்.

"தானியேல், இன்றிரவு நாம் நெடுந்துரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால், என் குதிரைகளுள் ஒன்றுக்குச் சேணம் வைத்துத் தயாராக நிறுத்தி வை! நேற்றிரவு நீயும் நெடுந்துரம் நடந்ததால் களைத்திருப்பாய்: ஆதலால், உனக்கும் ஒரு குதிரை தயாராயிருக்கட்டும்ǃ" என்று கட்டளையிட்டான், குள்ளன்.

எசமானன் தன்னிடத்திலே காட்டிய பரிவுக்குத் தானியேல் நன்றி சொன்னான். "ஆனால், உங்களுடைய குதிரை லாயம் எங்கேயிருக்கிறது? இங்கே இந்தக் கோட்டை, மைதானம், இதன் ஒரத்திலே ஒரு முள்ளுமரம், அதோ ஒரு குன்று, குன்றின் அடியில் சதுப்பு நிலம் ஆகியவைகளைத் தவிர, வேறு எதையும் காணவில்லையேǃ" என்று கேட்டான்.

“என்னிடம் கேள்வியே கேட்கக்கூடாது? நேரே அந்தச் சதுப்பு நிலத்திற்குப் போய் முரட்டு நாணலாக இரண்டு நாணல் குச்சிகளைப் பறித்துக்கொண்டு வா!”

அவ்வாறே தானியேல் வாய் பேசாமல் போய், நீண்டு தடித்திருந்த இரண்டு நாணல்களைப் பறித்துக்கொண்டு வந்தான். குள்ளன் அவைகளை என்ன செய்யப் போகிறான் என்று அவனுக்கு விளங்கவில்லை.

அவைகளுள் ஒன்றைக் குள்ளன் வாங்கி, அதன் மேல் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, குதிரைமீது ஏறுவது போலப் பாவனை செய்தான். "நீயும் ஏறிக்கொள், தானியேல்ǃ " என்று அவன் கூவினான். "ஐயா, நான் எதன்மீது ஏறிக்கொள்வது? ஒன்றும் புரிய வில்லையேǃ " என்றான், தானியேல்.