பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எசமானனும் வேலைக்காரனும்

17


 பணியாள் பக்கம் திரும்பி, "தானியேல், நாளையோடு எனக்கு ஆயிரம் ஆண்டுகள் பூர்த்தியாகின்றன!” என்றான்.

"கடவுள் நம்மை ஆசீர்வதிக்கட்டும், ஐயா !” என்றான், தானியேல்.

"அந்தப் பெயரை இனிமேல் ஒருகாலும் சொல்லி விடாதே, தானியேல்! இல்லையென்றால், நீயே என் அழிவுக்குக் காரணமாவாய். நான் உலகிலே தோன்றி நாளையோடு வயது ஆயிரம் நிறைவேறுவதால் நான் திருமணம் செய்துகொள்வது நலமென்று கருதுகிறேன்!”

"நானும் யாதோர் ஐயமுமில்லாமல் அவ்விதமே எண்ணுகிறேன். தங்களுக்குத் திருமணத்தில் நாட்டமிருந்தால் போதும்!”

“அதற்காகத்தான் நான் இந்தக் காரிகோகுன்னியெல் என்ற கிராமத்தை நோக்கி இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இங்கே, இந்த வீட்டில், இன்றிரவு இரைலீ என்ற பெண் உரூனே என்பவனை மணந்துகொள்ளப்போகிறாள். அவள் நல்ல உயரமும் அழகும் கொண்டவள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை நானே மணந்து கொண்டு, அழைத்துச் செல்ல விரும்புகிறேன்!”

"அதற்கு அவள் என்ன சொல்லுவாளோ?”

குள்ளனின் முகம் கடுகடுத்தது. “பேசாதே! என்னிடம் கேள்விகள் கேட்பதற்காக உன்னை நான் என்னுடன் அழைத்து வரவில்லை” என்று சொல்லி அவன் அதட்டினான். மேற்கொண்டு விவாதம் செய்யாமல், அவன் வழக்கமான மந்திரச் சொற்களைச் சொல்லத் தொடங்கினான். தானியேலும் அவைகளைச் சொல்லிக் கொண்டான். காற்றைப் போல் திறவுகோல் துவாரத்தின் வழியாக எந்தக் கதவையும் தாண்டிச் செல்லும் ஆற்றலை அளிப்பவை அந்தச் சொற்கள். குள்ளன் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லியதில் தானியேல் தன்னை ஒரு மேதாவியென்று எண்ணிக்கொண்டான்.

இருவரும் உள்ளே சென்றதும், குள்ளன் கூடத்திலிருந்த ஒரு விட்டத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். தானியேலும் அவனுக்கு எதிர்ப்புறத்தில் வேறொரு விட்டத்தில் அமர்ந்துகொண்டான். உயரே இருந்தால் கீழே