பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீமாட்டி காதலீன்
25
 

வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆனால், அவர்கள் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தனர். கொள்ளையும் நடந்து முடிந்துவிட்டது.

பின்னால், ஏழைகள் காதலினிடம் சென்று துயரங்களைக் களையும்படி வேண்டிய பொழுது அவளால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அவள் குடியிருந்த மாளிகையைக்கூட ஏழைகளுக்குக் கொடுத்திருந்தாள்.

இடையில் மக்களின் நிலை மிகவும் அவலமாய்ப் போய்விட்டது. ஊரிலே போதுமான தானியங்களும் உணவுப் பொருள்களும் இல்லை. மேலை நாடுகளிலிருந்து அவை வந்து சேர எட்டு நாள்கள் செல்லுமென்று சொல்லப்பட்டது. அந்த எட்டு நாள்களும் எட்டு யுகங்கள் தாம் ! அந்த நாள்களைக் கழிப்பது எப்படியென்று சாதாரண மக்கள் எல்லோரும் தயங்கித் தவித்தார்கள். அவர்கள் பட்டினி கிடந்து மடிய வேண்டும், அல்லது வேதப் புத்தகம் அறிவித்துள்ள நேர்மை, நீதிகளையெல்லாம் காற்றிலே பறக்கவிட்டுத் தங்களுடைய ஆன்மாக்களை விற்றுவிட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. ஆண்டவன் அளித்த பேறுகளுள் ஆன்மாக்களுக்கு இணையானவை எவை? அத்தகைய கிடைத்தற்கரிய ஆன்மாக்களையும் மக்கள் விற்றுவிடும்படி நேர்ந்ததைக் கண்டு சீமாட்டி காதலீன் கண்ணிர் வடித்தாள். தன் கூந்தலைப் பிய்த்துக்கொண்டு கதறினாள். மலர் போன்ற தன் மார்பிலே அடித்துக் காயப்படுத்திக்கொண்டாள். பிறகு, திடீரென்று அவள் எழுந்திருந்தாள். அவள் நெஞ்சிலே ஒர் உறுதி தோன்றிவிட்டது.

அவள் நேராக ஆன்மாக்களை விலைக்கு வாங்கும் இரு வியாபாரிகளையும் நாடிச் சென்றாள்.

"தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

"நீங்கள் ஆன்மாக்களை விலைக்கு வாங்குகிறீர்களா?”

"ஆம், இன்னும் சில ஆன்மாக்கள் கிடைத்தால் வாங்கலாம். அதிகமாக வாங்க முடியாதபடி நீங்களே செய்துவிட்டீர்களே !”