பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டு மல்லர்கள்
35
 


இருபத்தொரு ரொட்டிகளைச் சுட்டு அடுக்கி வைத்தாள். அடுத்தாற்போல், இரண்டு பெரிய பானைகளில் தயிரும் மோரும் ஊற்றி வைத்தாள். குகுல்லின் வந்தால் தயிரை என்ன செய்யவேண்டுமென்று அவள் மக்கெளலுக்குச் சொல்லி வைத்தாள். வேலைகளை முடித்துவிட்டு அவள் நிம்மதியாக அமர்ந்திருந்தாள். மறுநாள் இரண்டு மணிக்குத்தான் விருந்தினன் வருவானென்று கணவன் சொல்லியிருந்ததால், அதுவரை அவள் பேசாமலிருந்தாள்.

மக்கெளல் வலக்கைக் கட்டைவிரலை அடிக்கடி கடித்துப் பார்த்துக்கொண்டான். அந்த விரலிலிருந்து அவனுக்கு எதிரி நிச்சயமாக எப்பொழுது வருவானென்பது தெரிந்துவிடும். மேலும், அவனுடைய வல்லமையெல்லாம் அந்த விரலைப் பொறுத்தே அமைந்திருந்தது. இதே போலக் குகுல்லினுக்கு முக்கியமான விரல் அவனுடைய வலக்கை நடுவிரல் எக்காரணத்திலாவது அந்த விரலுக்கு ஆபத்து நேர்ந்தால், பிறகு அந்தச் சிங்கத்தைச் சுண்டெலிகூட விரட்டியடிக்க முடியும். இந்த மர்மம் மக்கெளலுக்கும் தெரியும்.

மறுநாள் இரண்டு மணி அடித்ததும் குகுல்லின் பள்ளத்தாக்கில் ஏறி வந்துகொண்டிருந்தான். ஊனாக் உடனே தன் வேலைகளைத் தொடங்கிவிட்டாள். கூடத்திலே ஒரு பெரிய தொட்டிலை மாட்டினாள். மக்கெளலை அதில் ஏறிப் படுத்துக்கொள்ளச் சொன்னாள். இது அவனுக்கு மிகவும் கேவலமாகத் தோன்றியது. நாடு முழுதும் புகழ் பெற்ற மல்லனாகிய தான், கோழைத்தனமாகக் குழந்தை போல் தொட்டிலில் படுப்பதை அவன் விரும்பவில்லை. ஆனால், வேறு வழியுமில்லை. தேவியின் கட்டளைப்படி அவன் நடக்க வேண்டியிருந்தது. தொட்டிலில் அவன்மீது துணிகளை எடுத்துப்போட்டுப் போர்த்தினாள், ஊனாக்.

"இனி, நீங்கள் மக்கெளல் இல்லை, அவருடைய குழந்தை என்று எண்ணிக்கொண்டு நடிக்கவேண்டும் வாயை மூடிக்கொண்டு, நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்!” என்று அவள் கூறினாள்.

உடனே குகுல்லின் வந்துவிட்டான். வீட்டினுள் நுழையும் போதே, "எல்லோரையும் கடவுள் காப்பாராக!