பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை
குழந்தைகளே !
 

மகாகவி பாரதியாரை நீங்கள் அறிவீர்கள் ! அவர் இயற்றிய "ஓடி விளையாடு பாப்பா " என்னும் பாட்டைப் பாடாத தமிழ்க் குழந்தை உண்டா?

பாரதியார் இன்னும் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார்.

அதில்,
 

" சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் !"

என்றார்.
 

இதன் பொருள் என்ன?

தமிழைத் தவிர இன்னும் பல மொழிகள் இருக்கின்றன. அம்மொழிகளில் பல நல்ல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியன இருக்கின்றன.

அவற்றைத் தமிழ் மக்கள் எப்படிப் படிக்க இயலும்? அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதினால் தமிழ் மக்கள் எல்லாரும் படிப்பர்; பயன் பெறுவர். இதைத்தான் மகாகவி பாரதியார் மேலே சொன்ன பாட்டால் சொல்லியிருக்கிறார்.

பாரதியார் விரும்பிய செயலைத்தான் இப்பொழுது நாங்கள் செய்திருக்கிறோம்.

அயர்லாந்து என்பது ஒரு நாடு. அந்நாட்டுச் சிறுவர்களுக்காகப் பல சிறுகதைகள் உள்ளன. அவற்றை நீங்களும் படித்து மகிழ வேண்டாவா?

திரு. ப. ராமஸ்வாமி என்பவர் சிறந்த எழுத்தாளர். அவர், அயர்லாந்து நாட்டு ஏழு சிறுகதைகளைச் சேர்த்து 'இறுமாப்புள்ள இளவரசி' என்னும் பெயரில் இந்நூலைத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார்.

இந்த ஆண்டு (1979) "சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு!" இச்சமயத்தில், அயர்லாந்து நாட்டுச் சிறுகதைகள் தமிழில் வெளிவருவது மிகப் பொருத்தமானது அல்லவா?

வானவில்லை அழகு செய்யும் ஏழு வண்ணங்களைப் போல, இனிக்கும் ஏழு செங்கரும்புச் சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. படித்துச் சுவையுங்கள்; மற்ற குழந்தைகளையும் படித்து மகிழச் சொல்லுங்கள்!

பழனியப்பா பிரதர்ஸ்