பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இறுமாப்புள்ள இளவரசி




"இப்பொழுது உண்மையாகச் சொல்லுங்கள். நான் சொல்வதை மறுத்துப் பேசவேண்டியிருக்கிறதேயென்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. மனிதர்களுக்கு ஆன்மாக்கள் உண்டா இல்லையா? இதைப்பற்றி உங்கள் நம்பிக்கை என்ன என்பதை என்னிடம் சொல்லுங்கள்:

"ஐயா, ஒரு காலத்தில் நாங்கள் மனிதர்களுக்கு ஆன்மாக்கள் இருந்தன என்று எண்ணியிருந்தோம். ஆனால், நல்லவேளையாக தங்களுடைய போதனையால் நாங்கள் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம் நரகம் கிடையாது. சுவர்க்கம் கிடையாது. கடவுளும் கிடையாது. இதுதான் எங்கள் நம்பிக்கை. தாங்கள் சொல்லித்தந்ததும் இதுதான் ”


பாதிரியாருக்கு அச்சத்தால் முகம் வெளிறிப்போய் விட்டது. அவர், "இப்பொழுது கவனமாய்க் கேளுங்கள் ! நான் உங்களுக்குப் பொய்யைக் கற்பித்துவிட்டேன். கடவுள் இருக்கிறார். மனிதன் அழிவில்லாத ஆன்மாவைப் பெற்றிருக்கிறான். இதற்கு முன் நான் இல்லையென்று மறுதலித்தவை எல்லாம் உள்ளன என்று இப்பொழுது நம்புகிறேன் !" என்று உரத்த குரலில் கூவினார்.

அவர் தங்களை விவாதத்திற்குச் சோதனை செய்வதாக எண்ணி, அவர்கள் ஆரவாரம் செய்தனர்.

"ஆசிரியர் அவர்களே ! நீங்கள் சொன்னதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். கடவுளை எவர் கண்டிருக் கிறார், ஆன்மாவை எவர் பார்த்திருக்கிறார்? என்று அவர்கள் வினவத் தொடங்கினார்கள்.

அறை முழுதும் அவர்கள் கும்மாளமடித்துக் கொண்டிருந்தார்கள். பாதிரியார் பதிலுரைக்க எழுந்த பின்பும், அவர் பேச்சை யாரும் கேட்க முடியவில்லை, அவ்வளவு சத்தம் ஏற்பட்டிருந்தது. வழக்கமான அவருடைய விவாதத் திறமை, சொற்பொழிவு செய்யும் ஆற்றல் எல்லாம் அவரிடமிருந்து போய்விட்டன. அவர் கைகளைப் பிசைந்து கொண்டு, "ஆண்டவர் ஒருவர் இருக்கிறார் ஆண்டவர் இருக்கிறார் ! கர்த்தரே, என் ஆன்மாவின்மீது கருணை காட்டுவீராக!” என்று கூவினார்.

அவர்கள் அனைவரும் அவரைப் பரிகாசம் செய்தனர்; அவர் சொல்லிக்கொடுத்த பாடத்தை அவரிடமே திருப்பிக் கூறத் தொடங்கினார்கள்.