பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதிரியாரின் ஆன்மா

51



நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனவெல்லாம் பொய்யென்றும், பாவத்திற்குத் தண்டனையளிக்கும் இறைவன் ஒருவன் உளன் என்றும், பேரின்பமும் நிரையமும் உண்டென்றும், மனிதன் அழிவில்லாத ஆன்மாவைப் பெற்றிருக்கிறானென்றும், அது நித்தியமான பேரின்பத் தையோ பெருந்துயரையோ அடைந்தே தீருமென்றும் நீ எடுத்துக்காட்டு "


"எந்த உயிரையும் எவரும் மாய்த்துவிட முடியாது. அது இறைவன் ஒருவனால்தான் இயலும் இருபத்துநான்கு மணி நேரத்தில் உங்கள் ஆவி பிரியுமென்று தேவதூதர் சொன்னதாக நீங்களே தெரிவித்தீர்கள். அந்த நேரமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உங்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு நான் இங்கேயே தங்கியிருக்கிறேன் !” என்று சொல்லிப் பையன் தொழத் தொடங்கினான்.


சிறிது நேரத்தில் பாதிரியார் உடல் கடும் வேதனை களுக்குள்ளாயிற்று. அவர் கண்களை மூடிவிட்டார். அவருடைய ஆன்மா நான்கு வெள்ளைச் சிறகுகளுடன், அவர் உடலிலிருந்து மேலே பறந்து சென்றது. சிறுவன் ஒடிச்சென்று, மாணவர்களை அழைத்துவந்து அக் காட்சியைக் காட்டினான். அவர்கள் ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் ஆசிரியரின் ஆன்மா மேக மண்டலத்தில் மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தனர். அந்த ஆன்மாதான் அயர்லாந்திலே காணப்பெற்ற முதலாவது வண்ணத்துப்பூச்சி. அதுமுதல் பாவ விமோசன ஸ்தானத்திற்கு இறைவன் அழைத்துக்கொள்ளும்வரை இறந்தவர்களின் ஆன்மாக்கள் வண்ணத்துப்பூச்சிகளாக உலகிலே உலவி வருவதாக மக்கள் நம்புகின்றனர்.

பாதிரியார் பரலோகம் சென்ற பின்பு, அயர்லாந்தில் பள்ளிக்கூடங்கள் சீர்குலைந்துவிட்டன; மாணவர்கள் பெருவாரியாக வெளியேறிவிட்டார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை அயர்லாந்துக்கு அனுப்புவதில்லை. அந்நாட்டின் தலைசிறந்த அறிவாளியே தமக்கு ஆன்மா ஒன்றுண்டு என்பதை அறியாமலிருந்து, கடைசியாக ஒரு சிறு பையனின் கருணையால் ஈடேற்றமடைந்தார் என்றால், அவ்வளவு தூரம் சென்று படிப்பது என்ன படிப்பென்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.