பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7. பன்னிரண்டு காட்டு வாத்துகள்

முன்னொரு காலத்தில் ஒரு வேந்தனும் இராணியும் இன்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் ஒரு பெண்கூடப் பிறக்க வில்லை. நாம் எப்பொழுதும் இல்லாதவைகளுக்காக ஏங்குவோம். இருப்பவைகளைக்கொண்டு திருப்தி அடைய மாட்டோம், அல்லவா? இது போலவேதான் இராணியும் பெண்ணில்லாக் குறையை எண்ணி வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள், சாளரத்தின் வழியாக வெளியேயிருந்த மைதானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே பனி, தூய வெண்மையான கட்டியாக உறைந்திருந்தது. செக்கச் செவேலென்று சிவந்திருந்த ரோஜா மலர்ச்செடியருகில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. இவைகளை எல்லாம் கண்ட இராணிக்கு ஒர் எண்ணம் உதித்தது. எனக்கு ஒரு மகள் இல்லையே! இந்தப் பனிக்கட்டி போன்ற வெண்மையான உடலும், ரோஜாவைப் போன்ற சிவந்த கன்னங்களும், இந்தக் காகத்தைப் போன்ற கரிய கூந்தலுமுள்ள ஒரு பெண் எனக்குப் பிறந்தால் போதும், என் பன்னிரண்டு பிள்ளைகளையும் அவளுக்கு ஈடாகக் கொடுத்துவிடத் தயாராயிருப்பேன் ' என்று அவள் சொல்லிக்கொண்டாள்.

அவள் இவ்வாறு சொன்னவுடனேயே, திடீரென்று அவள் உடல் நடுங்கிற்று: பயத்தால் அவள் நிலைகுலைந்து நின்றாள். ஒரு கன நேரம் கழியுமுன், கடுமையான தோற்றத் துடன் கூடிய ஒரு கிழவி அங்கே அவள் முன்பு வந்து நின்றாள். "தவறான ஆசையினால் நீ இவ்வாறு விரும்பி விட்டாய். உன்னைத் தண்டிப்பதற்காக உன் விருப்பம் நிறைவேறும்படி செய்கிறேன். நீ எண்ணியபடியே உனக்கு ஒரு மகள் பிறப்பாள். ஆனால், அவள் பிறந்த அன்றே நீ உன் மாற்றக் குழந்தைகளை இழந்துவிடுவாய் " என்று சொல்லிவிட்டு, அவள் உடனே மறைந்து போய்விட்டாள்.

அந்தப்படியேதான் பின்னால் நடந்தது. இராணி தன் பேறுகாலத்தின்போது, தன் குழந்தைகள் அனைவரையும் ஒரு பெரிய அறையில் இருக்கும்படி செய்து, அறையைச்