பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்னிரண்டு காட்டு வாத்துகள்

65


 எப்படியும் அவர்களைக் கண்டு மீண்டும் பழைய உருவங்களை அடையச் செய்கிறேன்!”

அரசனும் அரசியும் அவளைச் சுற்றி மிகுந்த கட்டும் காவலும் அமைத்திருந்தும் ஒன்றும் பயன்படவில்லை. மறுநாள் இரவு அவள் அரண்மனையிலிருந்து வெளியேறிப் பக்கத்திலிருந்த வனத்திலே சுற்றி அலைந்துகொண்டிருந்தாள். அன்றிரவுமுதல் மறுநாள் மாலைவரை அவள் நிற்காமல் நடந்துகொண்டேயிருந்தாள். அவள், கையிலே சில பணியாரங்கள் கொண்டுவந்திருந்தாள். காட்டிலே கிடைத்த சில காய்களையும் கொட்டைகளையும் பறித்து வைத்துக்கொண்டாள். இவைகளே அவளுக்கு உணவாயின. அந்திமாலையில் அவள் ஒர் அழகான மரக்குடிசையைக் கண்டாள். அதைச் சுற்றி நேர்த்தியான பூந்தோட்டம் ஒன்றிருந்தது. அதிலே கொத்துக் கொத்தாகச் சில மலர்கள் நறுமணம் வீசிக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரு வேலியும், வேலிக்கு ஒரு திட்டிக்கதவும் இருந்தன. அந்தக் கதவைத் திறந்துகொண்டு, அவள் உள்ளே சென்று வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். அங்கே ஒரு மேசையின்மேல் பன்னிரண்டு தட்டுகளும், பன்னிரண்டு கரண்டிகளும், உணவுப் பொருள்களும் இருப்பதை அவள் கண்டாள். பக்கத்திலிருந்த ஒரு பலகணி வழியாக அவள் கவனிக்கையில் மற்றொரு பெரிய அறையில் பன்னிரண்டு கட்டில்களும் காணப்பெற்றன. அவள் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, திட்டிக் கதவு திறக்கப்படும் ஒசையும், காலடி ஓசைகளும் கேட்டன. பன்னிரண்டு இளைஞர்கள் உள்ளே வந்தனர். அவர்கள் அவளைக் கண்டதும் அவர்களுள் ஒவ்வொருவர் முகத்திலும் சோகமும் வியப்பும் காணப்பட்டன. அவர்களுள் மூத்தவன், "இளஞ்செல்வி ! இங்கே நீ வரும்படியான துரதிர்ஷ்டம் என்ன நேர்ந்தது உனக்கு?” என்று வினவினான். "ஒரு பெண்ணுக்காக நாங்கள் எங்கள் தந்தையின் அரண்மனையை விட்டு வெளி வந்தோம். அதுமுதல் பகல் முழுதும் நாங்கள் வாத்துகளாகத் திரிந்து வருகிறோம். இது நடந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு சபதம் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் கையிலே முதலில் சிக்குகிற பெண்னைப் பலி வாங்கிவிடவேண்டும் என்பதே அந்தச் சபதம். ஒரு பாவமும் அறியாத, கள்ளம் கபடமற்ற, அழகியான உன்னை உலகில் வாழவிடாமற்