பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66
இறுமாப்புள்ள இளவரசி
 

 செய்ய வேண்டியிருப்பது பரிதாபந்தான்; ஆனால், நாங்கள். எங்கள் சபதத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் !" என்றும் அவன் சொன்னான். "நான் உங்களுடைய ஒரே சகோதரி. இவற்றைப்பற்றியெல்லாம் நேற்றுவரை எனக்கு எதுவும் தெரியாது; தெரிந்தவுடன் நேற்றே நான் உங்களைத் தேடி வெளிக் கிளம்பிவிட்டேன்; உங்களுக்கு என்னாலான உதவியைச் செய்யவே நான் வந்துள்ளேன் !"

இதைக் கேட்டு அவர்களுள் ஒவ்வொருவனும், கைகளைப் பிசைந்துகொண்டு, துக்கத்தோடு தலைகவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டே நின்றான். அப்பொழுது பூமியில் ஒர் ஊசி விழுந்தாலும் ஒசை கேட்கும், அவ்வளவு அமைதி நிலவியிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் மூத்தவன், “எங்கள் சபதத்தைத்தான் சபிக்க வேண்டியிருக்கிறது! இப்பொழுது என்ன செய்யலாம்” என்று கூறினான்.

"என்ன செய்யலாம் என்பதை நான் சொல்கிறேன்!” என்று அங்கே திடீரென்று தோன்றிய கிழவி ஒருத்தி பேசத் தொடங்கினாள் : “உங்களுடைய தீய சபதத்தை உடைத்தெறியுங்கள் யாராவது அவளிடம் கை நீட்டினால், உங்களைக் கோரைப் புற்களாக நான் மாற்றிவிடுவேன் ! நான் உங்களுக்கும் அவளுக்கும் ஒருங்கே நன்மையை நாடுகிறவள். அவள் மூலந்தான் உங்களுக்கு விமோசனம் பிறக்கவேண்டும். இந்த வனத்திற்கு வெளியேயுள்ள சதுப்பு நிலத்தில் படர்ந்துள்ள பாசியிலிருந்து நூல் நூற்று, அந்த நூலால் உங்களுக்காகப் பன்னிரண்டு சட்டைகள் பின்னி முடிக்க வேண்டும்; இந்த வேலைகள் அனைத்தையும் அவளே தன் கைகளால் செய்யவேண்டும். பின்னி முடிக்க ஐந்தாண்டுகள் ஆகும்; அந்தக் காலம் முழுதும் அவள் ஒருமுறைகூட வாய் திறந்து பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, அழவும் கூடாது. இவற்றுள் ஒன்றில் ஒருமுறை அவள் தவறிப்போனாலும் நீங்கள் உங்கள் ஆயுள் முடியும்வரை பகல் முழுதும் வாத்துகளாகவே இருக்கவேண்டியதுதான் ! ஆகையால், உங்களுடைய சகோதரியைக் காத்துக்கொள்ளுங்கள். அவளால்தான் உங்களுக்குக் கதிமோட்சம் கிடைக்கும் !” இதைக் கூறியபின் கிழவி அங்கே காணப்படவில்லை. உடனே இளவரசர்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய அன்புத் தங்கையை யார்