பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்னிரண்டு காட்டு வாத்துகள்

69


 கையால் அணைத்துக்கொண்டிருந்தாள். அவள் கையை எடுத்துத் தள்ளிவிட்டு, மாற்றாந்தாய் வேகமாகக் குழந்தையைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டாள். குழந்தை கீழே விழுமுன்னே வெளியே காத்திருந்த ஒநாய் அப்படியே அதை வாயினால் கெளவிக்கொண்டு, ஒரு நொடியில் தோட்டத்தின் வேலியைத் தாண்டி வெளியே ஒடிவிட்டது. கொடுமனம் படைத்த மாற்றாந்தாய், தன் விரல்களை ஊசியால் குத்தி உதிரமெடுத்து, அதை உறங்கிக்கொண்டிருந்த இளவரசியின் வாயைச் சுற்றித் தடவி வைத்தாள்.

அரசன் அப்பொழுதுதான் வேட்டையிலிருந்து திரும்பி அரண்மனைக்குள் வந்துகொண்டிருந்தான். அவனை அவள் அழைத்து, நீலிக் கண்ணிர் வடித்து, அழுதுகொண்டே கைகளைப் பிசைந்து நின்றாள். நேராக அவனை இளவரசியின் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே இளவரசியின் அவனுடைய பட்டத்து இராணியின் வாயில் உதிரத்தைக் கண்டான். அவள் பக்கத்தில் குழந்தையையும் காணவில்லை ! பழிபாவத்திற்கு அஞ்சாத பழைய இராணியின் பேய்த் தன்மையைச் சொல்வதா, அரசனும் இளவரசியும் அடைந்த துக்கத்தையும் நடுக்கத்தையும் குழப்பத்தையும் சொல்வதா, அல்லது தன் இராணியைப்பற்றி அரசன் அடைந்த வெறுப்பையும் இழிவான எண்ணத்தையும் சொல்வதா, அல்லது இளவரசி நெஞ்சிலே தேங்கி நின்ற சோகத்தை அழுது வெளியிடவோ, வாய் திறந்து பேசவோ வழியின்றித் துடித்ததைச் சொல்வதா? எதைச் சொல்வதானாலும் மணிக்கணக்காக ஆகும். அரசன் ஒரு யுக்தி செய்தான். அன்னையிடம் இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாதென்றும், இராணி குழந்தையைச் சாளரத்தின் பக்கம் வைத்துக் கொண்டிருக்கையில் குழந்தை தவறி வெளியே விழுந்து விட்டதென்றும், அதை ஏதோ வனவிலங்கு தூக்கிச் சென்று விட்டதென்றும், அவள் வெளியே தெரிவிக்க வேண்டுமென்றும் அவன் கண்டிப்பாகச் சொல்லிவைத்தான். அவளும் அப்படியே செய்துவருவதாகச் சொல்லிவிட்டு, பின்னர்த் தானும் அரசனும் படுக்கையறையிலே கண்ட காட்சியையே இரகசியமாக வெளியிட்டுவந்தாள்.

நாடு முழுவதிலும் எந்த இராஜ்ஜியத்திலும் இளவரசியைப் போலத் துக்கமடைந்தவர் எவருமிலர்.