பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இறுமாப்புள்ள இளவரசி
70
 

 குழந்தையைப் பறிகொடுத்த சோகம். கணவனின் பழிப்பினால் ஏற்பட்ட வேதனை - இரண்டும் சேர்ந்து அவளுடைய நெஞ்சே வெடித்துவிடும் போலாகிவிட்டது. அந்த நிலையிலும் அவள் வாயைத் திறக்கவில்லை, அழவுமில்லை; சதுப்பு நிலப் பாசியை நூற்பதையும், சட்டைகள் பின்னுவதையும் நிறுத்தவுமில்லை. அடிக்கடி பன்னிரண்டு வாத்துகளும் அரண்மனைத் தோட்டத்திலுள்ள மரங்களிலே வந்து அமர்ந்துகொண்டும், மெல்லிய மணலில் நின்றுகொண்டும் அவளுடைய அறையின் சாளரங்களைக் கவனித்துக்கொண்டிருப்பது வழக்கமாயிருந்தது. ஆதலால், அவள் விரைவிலே பின்னல் வேலையை முடித்து, எல்லாச் சட்டைகளையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலேயே கருத்தாயிருந்தாள். மற்றோர் ஆண்டும் முடிந்துவிட்டது. அப்பொழுது பன்னிரண்டாவது சட்டையும் முடிவடைவதற்கு ஒரு கை மட்டும் பின்ன வேண்டியிருந்தது. அந்நிலையில் அவளுக்குப் பேறுகாலம் நெருங்கிற்று. இரண்டாவது குழந்தையாகத் தங்கச்சிலை போன்ற ஒரு பெண்ணை அவள் பெற்றெடுத்தாள்.

இந்தத் தடவை அரசன் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தான். இளவரசியையும் குழந்தையையும் ஒரு கண நேரங்கூடப் பிரியாமல் நின்று கவனித்துக் காவல் செய்வதற்கு அவன் தக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இருண்ட மனம் கொண்ட பழைய இராணி, அவனுடைய காவலையும் தகர்த்து, தன் துரோகத்தைச் செய்ய முன் வந்தாள். காவலர் சிலருக்கு இலஞ்சம் கொடுத்து, மற்றையக் காவலர்களை உறங்கச்செய்து, இளவரசிக்கும் முன்போல் மது கலந்த பாலைக் கொடுத்துக் கிறங்க வைத்துவிட்டாள். குழந்தையைத் தூக்கிச் சென்று கொன்றுவிடும்படி அவள் ஒரு காவலனையே ஏற்பாடு செய்தாள். அவன் தூக்கி வெளியே கொண்டுவருகையில், அவள் தோட்டத்தில் எட்டிப் பார்த்தாள். அங்கே முன்னால் வந்த ஒநாயே வந்து நின்று, கடைவாயை நக்கிக்கொண்டு, அவளை ஏறிட்டுப் பார்த்தது. வேலை எளிதாகிவிட்டதென்று, அவள் குழந்தையைக் காவலனிடமிருந்து வாங்கி, ஒநாயிடம் வீசி விட்டாள். முன்போலவே ஒநாய் குழந்தையைக் கெளவிக் கொண்டு ஓடிவிட்டது. பின்னர் அவள் தன் விரல்களில் ஊசியால் குத்தி, வடிந்த உதிரத்தை இளவரசியின் வாயைச்