பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பன்னிரண்டு காட்டு வாத்துகள்
71
 

சுற்றித் தடவிவிட்டு, வெளியே வந்து ஊளையிட்டும் கத்தியும் அலறியும் அரசனையும் அரண்மனையிலிருந்த பலரையும் வரச்செய்து, இளவரசியின் அறை முழுதும் ஆள்கள் கூடி நிற்கும்படி செய்துவிட்டாள். எல்லோரும், இளவரசியே தன் குழந்தையை அப்பொழுதுதான் விழுங்கியிருப்பாளென்று உறுதியாக எண்ணினார்கள்.

ஏழை இளவரசி என்ன செய்வாள்! இனித் தன் உயிர் தரித்திராது என்று அவள் கருதினாள். எதையும் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றலைக்கூட அவள் மனம் இழந்துவிட்டது. அவளுக்கு ஆண்டவனைக்கூடத் தொழத் தோன்றவில்லை. அடித்துவைத்த கற்சிலை போல், அவள் இருந்த இடத்திலிருந்து பெயராமல், பன்னிரண்டாவது சட்டையில் எஞ்சியிருந்த ஒரு கையைப் பின்னிக்கொண்டிருந்தாள்.

அரசன், அவளை வனத்திலே, தான் முன்பு கண்ட வீட்டுக்கே அழைத்துச் சென்று, அங்கே விட்டுவர எண்ணினான். ஆனால், அவனுடைய மாற்றாந்தாயும் மந்திரிகளும் நீதிபதிகளும் அதற்கு ஒப்பவில்லை. அன்று பகல் மூன்று மணிக்கு அவளை ஒரு மரக்கட்டையிலே கட்டித் தீ வைத்துக் கொன்றுவிடவேண்டுமென்று அவர்கள் முடிவு கூறிவிட்டனர். அந்த நேரம் நெருங்கி வந்ததும், அரசன் அரண்மனையின் ஒரு மூலையிலே போய் ஒதுங்கியிருந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் அடைந்த வேதனையைப் போல் அவனுடைய இராஜ்ஜியத்திலே எவரும் அடைந்திருக்கமாட்டார்கள்.

கொலையாளிகள் வந்து இளவரசியை அழைத்துச் செல்லும் பொழுது, அவள் தான் வைத்திருந்த சட்டைகளையெல்லாம் கைகளிலே எடுத்துக்கொண்டு சென்றாள் கடைசிச் சட்டையில் இன்னும் சில பின்னல்கள் மட்டும் போடவேண்டியிருந்தன. மரக்கட்டையில் அவளைக் கட்டிய நேரத்திலும் அவளுடைய கரங்கள் பின்னல் வேலையை நிறுத்தாமல் வேகமாகச் செய்துகொண்டேயிருந்தன. கடைசிப் பின்னலையும் அவள் போட்டு முடித்தவுடன், அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணிர் அந்தச் சட்டையின்மீது விழுந்தது. ஒரு கண நேரத்திற்குப்பின் அவள் துள்ளியெழுந்து, "நான் நிரபராதி! என் கணவரை இங்கே அழையுங்கள் " என்று வாய் திறந்து கூவினாள். கொலையாளிகள் தங்கள் வேலையை நிறுத்திக் கொண்டனர். ஆனால், அவர்களுள் தீயோன் ஒருவன்,