பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சூத்திரம்-க.) இறையனார் அகப்பொருள் 93.

 'வேரித் தடந்தொங்கல் அண்ணல் விருந்தா யிருந்தமையாற்
பூரித்த மென்முலை யேழை புனையிற்பொல் லாது கொல்லாம்
பாரித்த வேந்தர் பறந்தலைக் கோடிப் படப்பரிமா
வாரித்த கோமான் மணிநீர் மலயத்து மாந்தழையே.' (125)

‘ ஏமாண் சிலைநுதல் எழையும் ஏற்குமின் தேனகலாப்
பூமாண் கமழ்கண்ணி யாய்கின்ற தொன்றுண்டு பூழியர்கோன்
பாமாண் தமிழன் பராங்குசன் கொல்லிப் பனிவரைவாய்த்
தேமாண் பொழிலின் அகத்தன்றி இல்லையித் தேந்தழையே.' (126)

'கைந்நிலத் துச்சிலை யாற்கணை சிந்திக் கறுத்தெதிர்ந்தார்
செந்நிலத் துப்படச் சீறிய கோன்செழுந் தண்பொதியில்
இந்நிலத் திம்மலை மேலவொவ் வாவிருந் தண்சிலம்பா
எந்நிலத் தெம்மலை மேலஇச் சந்தனத் தீர்ந்தழையே.' (127)


இவையெல்லாம் ஏற்கச்சொல்லிக் கொள்க, மேலனபோல.

அஃதேயெனின், இவற்கு முடிக்கக் கருதுவாள் இவ்வாற்றான் இவனை வருத்துவது எற்றிற்கோ எனின்,
தன்கண் நாணுக் கெடுந்துணையுங் குறியாடி,
நாணினது நீக்கத்துக்கட் கொண்டுநிலை கூறுவாள் என்பது.
அஃதேயெனின், முன்னுறு புணர்ச்சி போலத் தலைப்பெய்விப்பல் என்னும் வேட்கை அவட்கு உரிய என்றமையான்,
முன்னுறுபுணர்ச்சியை உணர்ந்தாளோ எனின்,
உணர்ந்தா ளல்லள்;
அந்நீர்மைக்கு வரம்பெய்தப் புணர்ப்பல் என்னும் நினைப்பினள்.
அங்கினைப்பினை ஆசிரியன் தான் முன்னுறு புணர்ச்சியா ஒப்பித்தான் என்பது.
(12)

சூத்திரம் - 13

குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
கிழவிக் கில்லை தலைப்பெயல் ஆன.

என்பது என்னுதலிற்றோ எனின்,
தலைமகளது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
குறையுறு புணர்ச்சி என்பது - குறை யுறவினாற் புணரும் புணர்ச்சி என்றவாறு;
தோழி தோத்து என்பது - தோழிமாட்டு என்றவாறு;
கிழவிக்கு இல்லை என்பது - தலைமகட்கு இல்லை என்றவாறு;
தலைப்பெயல் ஆன என்பது - தலைப்பெய்தற்கு இலக்கணம் என்றவாறு.

(பாடம்) 1. துக்கணையாற் சிலையுந்திக்.

2. தலைப்பெய்தற்கண் என்றவாறு.