பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சூத்திரம் - க) இறையனார் அகப்பொருள்

இச் சூத்திரத்தின் கருத்து என்னையோ எனின்,
இவ் வதிகாரத்து உரைக்கின்ற பொருள் இன்னது என்பதூஉம், இன்னதனோடு ஒக்கும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
அன்னதாகல் இச் சூத்திரம் கண்ணழிப்ப விளங்கும்.

கண்ணழித்தல் என்பது பதப்பொருள் சொல்லுதல்

இதன் பொருள்:
அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது என்பது - அன்பினானாய ஐந்திணையிற் களவு எனப்பட்ட ஒழுக்கம் என்றவாறு;
அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள் என்பது- அந்தணர் என்பார் பார்ப்பார், அருமறை என்பது வேதம், மன்றல் என்பது மணம், எட்டு என்பது அவற்றது தொகை என்றவாறு;
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் என்பது- கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் வழக்கினைக் களவு என்று சொல்லுவர் கற்றுவல்லோர் என்றவாறு.

இனிப், பொழிப்புத் திரட்டல் என்பது
அன்பினானாய ஐந்திணையிற் களவு எனப்பட்ட ஒழுக்கம் பார்ப்பார் வேதத் துக்கண் மகட்கோடலாறு என்னும் எட்டினுள் கந்தருவர் ஒழுகலாறு ஒப்பது, அதனைக் களவு என்று சொல்லுவர் கற்று வல்லோர் என்றவாறு.

இனிச், சூத்திரத்துப் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடா விடை உள்ளுறுத்து உரைக்கும் உரை யெல்லாம் அகல வுரை எனக் கொள்க.

அன்பு என்பது

அன்பின் ஐந்திணை என்ற விடத்து, அன்பு அறிந்தேனாயினன்றே, அன்பினானாய ஐந்திணையும் அறிவது எனின்,
அது, (குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும் போல' இதுகாண் அன்பு என்று 'போதத்திறந்து காட்டலாகாது)
அன்புடையரான குணங் கண்டவிடத்து இவை உண்மையான் ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற்பாற்று.
அன்புடையரான குணம் - யாவையோ எனின்
சாவிற்சாதல், நோவினோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வு நனி வேட்டல், பிரிவு நனி யிரங்கல் என இவை; என்றார்க்கு,
இவை திரிபுடைய;
என்னை இவை திரிபுடையவாறு எனின்,

சாவிற் சாதல் என்பது,
அன்பினானே நிகழ்வது அன்று
பிணியுடையளாய் வாழ்க்கையை முனிந்து செல்வாள் இது தலைக்கீடாகச் சாவல் என்று சாவவும் பெறும்;
இனிக்,


கண்டீ (பாடம்) 1. தந்து.