பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இறையனார் அகப்பொருள் (களவு

இவ்வகை குறைநயப்புக் கூறப்பட்ட தலைமகள் தலைமகனைக் காணலுறவினளாம்.
அக்குறிப்பு உணர்ந்த தோழி, தலைமகள் குறைநேர்ந்தாள் என்பது தலைமகற்கு அறியநிற்கும் என்பாரும் உளர்;
அதற்குச் செய்யுள் :

தழைவிருப்புரைத்தல்


'சிலைமிசை வைத்த புலியும் கயலுஞ்சென் றோங்குசெம்பொன்
மலைமிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சியன்னாள்
முலைமிசை வைத்துமென் தோள்மேற் கடாய்த்தன்மொய் பூங்குழல்சேர்
தலைமிசை வைத்துக்கொண் டாளண்ணல் நீதந்த தண் தழையே.' (100)

' கழுது குருதி படியக் கலிநீர்க் கடையல்வென்ற
விழுது படுநெடு வேல்மன்னன் ஈர்ம்புனல் கூடலன்னாள்
தொழுது தலைமிசை வைத்துங் கொண்டாள் வண்டுந் தும்பியும்தேன்
கொழுது மலர்நறுந் தாரண்ணல் நீதந்த கொய்தழையே.' (101) எனக் கொள்க.
(11)

சூத்திரம் - 12
குறையுறுங் கிழவனை உணர்ந்த தோழி
சிறையுறக் கிளந்து சேட்பட நிறுத்தலும்
என்னை மறைத்தல் எவனா கியரென
முன்னுறு புணர்ச்சி முறைமுறை செப்பலும்
மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ
நீயே சென்று கூறென விடுத்தலும்
அறியாள் போறலும் குறியாள் கூறலும்
படைத்துமொழி கிளவியும் குறிப்புவேறு கொளலும்
அன்ன பிறவுந் தலைப்பெயல் வேட்கை
முன்னுறு புணர்ச்சிக் குரிய என்ப.

என்பது என்னுதலிற்றோ எனின்,
தலைமகளைக் குறைநயப்பித்து அவளது குறிப்பு உணர்ந்து தன்னினாங் கூட்டம் கூட்டலுறுந் தோழி,
தலைமகன் தெருண்டு வரைந்தெய்தல் வேண்டி,
இவை யெல்லாங் கூறிச் சேட்படுத்து நிறுத்தப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.