பக்கம்:இறைவர் திருமகன்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

விட்டது. ஏனெனில், நள்ளிரவில், பெத்தலெம் நகர் முழுவதும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அமைதியான நேரத்தில் மேரி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அந்தப் பச்சைக் குழந்தையை வெள்ளைக் கந்தைத் துணிகளினால் சுற்றி மூடினாள் மேரி. அதற்குத் தொட்டில் வேண்டுமே! அதை எதிலே படுக்க வைப்பது? என்று எண்ணிய அவள், அங்கிருந்த மரப் புல் தொட்டி ஒன்றை எடுத்துத் தொட்டிலாக்கினாள். காய்ந்த புல் இருந்த அந்த மரத் தொட்டியில் கந்தைகளை விரித்து அதன் மேல் தன் அருமைக் குழந்தையைக் கிடத்தித் தூங்க வைத்தாள்.

எளிய தொழுவத்தில் மேரியின் மணி வயிற்றில் பிறந்த இந்தக் குழந்தை தான், எல்லாம் வல்ல இறைவனின் அருளுக்குரிய திருமகன் என்பதை அறியாமல் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், தேவ தூதர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்கள் இயேசு நாதர் பிறந்த செய்தியை உலகுக்கு அறிவிக்க வந்த போது வானம் ஒளிமயமாக விளங்கியது.