பக்கம்:இறைவர் திருமகன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

நீர் சீசரின் நண்பர். அல்லர்!" என்று வன்னெஞ்ச மிக்க குருமார்கள் அவனை அச்சுறுத்தினார்கள்.

சீசர் என்ற சொல் காதில் விழுந்தவுடன் பாண்டியஸ் பைலேட் மனம் துணுக்குற்றது. அவன் சீசரின் கீழ் வேலை செய்பவன். அவருக்காக ஜெருசலத்தை ஆள்பவன். அவரிடம் தன்னைப் பற்றி இந்தக் குருமார்கள் ஏதேனும் தவறாகச் சொல்லி வைத்தால் தன் கதி என்ன ஆகும் என்று நினைத்த போது அவன் உள்ளம் நடுங்கியது. ஒருவரைக் காப்பாற்றுவதற்காகத் தான் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை அவன் விரும்பவில்லை.

பாண்டியஸ் பைலேட் தன் ஆட்களைத் தண்ணீர் கொண்டு வரச் செய்தான். கூட்டத்தின் முன் அத்தண்ணீரால் தன் கைகளைக் கழுவிக் கொண்டான். “தண்டனைக் குரிய குற்றம் எதுவும் புரியாத இந்த மனிதரைத் தண்டிக்கும் பாவம் என்னைச் சேர்ந்ததல்ல. இவருடைய இரத்தத்தைச் சிந்தும் செயலுக்கு நான் பொறுப்பாளியல்ல! கண்டீர்களா?" என்று கேட்டான்.