பக்கம்:இறைவர் திருமகன்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. அந்த இளைய மகன் ஒரு நாள் திரும்பி வந்து விட்டான். எப்படி வந்தான்?

எலும்புந்தோலுமாக, வற்றி மெலிந்த உடலுடனும், அந்த உடலை ஒட்டியிருந்த அழுக்குப் படிந்த கந்தையுடையுடனும், பரட்டைத் தலையுடனும் பார்க்க ஒரு பிச்சைக்காரனைப் போன்ற தோற்றத்துடன் வந்தான், உருமாறியிருந்தாலும் தந்தை தன் மகனை யடையாளங் கண்டு கொண்டான். வீட்டின் அருகில் வருமுன்னேயே அவனை வரவேற்கத் தந்தை ஓடோடிச் சென்றான்.

'அப்பா, நான் பெரும் பாவி. தங்கள் மகன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதை யற்றவன்" என்று கண்ணீர் வழியக் கூறினான் மகன்.

ஆனால், தந்தையோ அவன் சொன்னதை யெல்லாம் கவனிக்கவில்லை. "அன்பு மகனே, வந்துவிட்டாயா?" என்று ஆசையோடு கூறி அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டான். பர பர வென்று வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு வந்து, "குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.