பக்கம்:இலக்கண வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக்கூறுபட இயங்கியமை வெளி.

அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே.

அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, 'யாப்பருங்கலம்' முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன.

அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று.

இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது.

“தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென
வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே”

என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு.

ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க.

தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று; 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினீயத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினீயத்தின் காலம் கி. மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/100&oldid=1471416" இலிருந்து மீள்விக்கப்பட்டது