பக்கம்:இலக்கண வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

வாருமின்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்" என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகில் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதும் நிரம்பத் தோற்றுவித்தலால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார்.

இனி 'ஐந்திறம்' என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இடமில்லையாம்.

இனி 'ஐந்திறம்' என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவிக்கும். பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்த்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது.

'ஐந்திரம்' எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த — படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது?

தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச் சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/103&oldid=1471420" இலிருந்து மீள்விக்கப்பட்டது