இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. தொல்காப்பிய உரைகள்
மூல நூல் ஆசிரியர் போலவே போற்றத்தக்க பெருமக்கள் நால் வகையாக உளர். அவர், மூல நூலை வழி வழியே படியெடுத்துப் பாதுகாத்துதவிய பெருமக்கள்; உரையெழுதுதல் வழியாக நூலைக் காத்ததுடன் அதன் செப்பமும் போற்றிக் காத்த உரையாசிரியப் பெருமக்கள்; ஏட்டுச்சுவடிகளை இயற்கை அழிவு செயற்கை அழிவு ஆகிய ஈரழிவுகளுக்கும் ஆட்படாமல் பாதுகாத்த பெரு மக்கள்; ஏட்டுச்சுவடிகளை ஆய்ந்து அச்சு நூலாக அழியா வாழ்வு செய்த பதிப்பாசிரியப் பெருமக்கள் என்பார்.
இந்நால்வருள் இரண்டாம் வகையினர் தொண்டு மதிப்புக்குரியது. அம்மதிப்புக்குரிமையை நமக்குக் கிடைத்துள்ள நூல்களின் பரந்த ஆய்வு கொண்டே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்தலால் கிடைக்கும் முடிவுகள் வருமாறு:
- (1) ”நமக்குக் கிடைத்துள்ள பழஞ்சுவடிகளுள் மூலச் சுவடியாக இருந்த நூற்சுவடிகளே மிகுதியாக அழித்துள்ளன.
- (2) உரையுடன் கூடிய நூற்சுவடிகளே மிகுதியாக நமக்குக் கிடைத்துள்ளன.
- (3) உரையாலேயே மூல பாடத்தைக் கண்டு நூலாக அமைத்துக் கொள்ளவும் நேர்ந்துளது.