பக்கம்:இலக்கண வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

இவரையன்றி இப்பகுதிக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர் நச்சினார்க்கினியரே. அவர் தாமும் இவர்க்குப் பின் உரை கண்டவர். இவரை ஏற்றும் மறுத்தும் உரைப்பவர். அவர் பொருளதிகாரத்தில், “இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப” என்றும், “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் சூத்திரத்தான் இல்லறமும் துறவறமும் கூறினார். இந்நிலையாலும் பிறவாற்றாலும் வீட்டிற்குக் காரணங் கூறினார்” என்றாரே யன்றிக் காமத்துப் பயனின்மை உய்த்துணரவைத்தாரெனக் கூறினாரல்லர். அவ்வாறு ஆசிரியர் கூறக் கருதியிருந்தால் உய்த்துணர்வில்லாமலே வெளிப்பட விளங்க உரைப்பார் என்பது இளம்பூரணரோ அறியார்? இவர் கொண்டிருந்த துறவுநிலை உந்துதலால் வந்த மொழி ஈதெனக் கொள்ளல் தகும். இனி மாறுகொளக் கூறல் என்பதற்குத் “தவம்நன்று என்றவன் தான்தவம் தீதென்று கூறல்”, என்பதும் (பொ. 654) குறிப்பாகலாம். இவர் துறவர் என்பது 'இளம்பூரண அடிகள்' என அடியார்க்கு நல்லார் குறிப்பாலும் (சிலப். 11: 18-20) புலப்படும்.

மயிலை நாதர் வரைந்த தொடரிலே இளம்பூரணர்க் குரிய தனிப்பெருஞ்சிறப் பொன்றைச் சுட்டுகிறார். அஃது, ‘உளங்கூர் கேள்வி’ என்பது. “செவி வாயாக நெஞ்சு களனாகப்” பாடம் கேட்பதும், கேட்டவற்றை உளத்தமைத்துக் கொள்வதும் பண்டைப் பயின்முறை. அம்முறையில் பல்கால் பலரிடைச் சென்று கேட்டுக் கருவூலமெனத் தேக்கி வைத்துக் கொண்ட முழுதறிவாளர் இளம்பூரணர் என்பதை நாம் அறிய வைக்கிறார் மயிலைநாதர். இதற்கு அகச்சான்று என்னை எனின், பலப்பலவாம், முதல் உரையாசிரியராகிய இவர், பலரிடைக் கேட்ட உரைகளைக் கொண்டே, ‘ஒரு சார் ஆசிரியர் உரைப்பர்’ என்றும், 'உரையன்றென்பார்' என்றும், ‘ஒருவன் சொல்லுவது’ என்றும் கூறிச் செல்கிறார் என்பது கொள்ளக் கிடக்கின்றது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/114&oldid=1471430" இலிருந்து மீள்விக்கப்பட்டது