பக்கம்:இலக்கண வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


இளம்பூரணர் தொல்காப்பியர்மேல் கொண்டிருந்த பேரன்பும், பெரு மதிப்பும் அவரைத் தொல்காப்பிய ரெனவே மதிக்கத் தூண்டுகின்றதாம். அகத்திணை ஏழாதல் போலப் புறத்திணையும் ஏழே என்பதை வலியுறுத்திக் கூறும் இளம்பூரணர், புறப்பொருள் பன்னிரண்டு என்பாரை மறுத்து அவ்வாறு கொள்வது. “முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க” என்கிறார். ஆசிரியர் தொல்காப்பியனார், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்றதை உளங்கூர்ந்து, அதனை அவர்க்கே ஆக்கி வழிபட்ட சான்றாண்மை இளம்பூரணர் வழியே புலப்படுதல் கண்டு கொள்க.

“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”

என்பதன் விளக்கத்தில் (எழுத். 33), “இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், ‘மொழிப’ என வேறொருவர் போலக் கூறியது, அதுவும் வேறொரு நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும்” என்று வரைகின்றார். தொல்காப்பியரை இளம்பூரணர் முதனூலாசிரியராகக் கொண்டார் என்பது இதனால் விளங்கும்.

முன்னிலையாக்கல் எனவரும் பொருளதிகார நூற்பா விளக்கத்தில் (98), “உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றாராகலின் இவ்வாசிரியர் உரைக்கின்ற வாற்றான் நிகழ்தல் பெரும்பான்மை” எனத் தொடர்கின்றார். தொல்காப்பியர் பற்றி இளம்பூரணர் குறித்த மதிப்பீடு எத்தகு பெருமைக்குரியது!

பொருளதிகாரத் தொடக்கத்திலே, “பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோ எனின், உலகத்தில் நூல் செய்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/115&oldid=1466764" இலிருந்து மீள்விக்கப்பட்டது