பக்கம்:இலக்கண வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

இலக்கணமும் கூறல்” என்கிறார். இக்குற்றம் செய்யாத சீருரையாளர் செந்தமிழ் இளம்பூரணர். இக்குற்றம் செய்தார், இவர் வடமொழி யறியார்' என்பர். எழுத்து. 42, 45, 75, சொல். 443, பொருள். 30, 151, 656 ஆகிய நூற்பாக்களின் உரைகளைக் காண்போர் இவர் வட மொழி அறியார் எனக் கருதார்.

இளம்பூரணர் சமணர் என்றும் சைவர் என்றும் கூறுவாருளர்.

படிமையோன் என்பதற்குத் ‘தவவொழுக்கத்தை யுடையான்’ என உரைவரைந்ததையும் (பாயிரம்) படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதையும் குறித்துச் சமணர் என்பர். படிமை என்பது கட்டமை ஒழுக்கத்தைச் சுட்டுவது என்பதைப் பதிற்றுப்பத்துள் கண்டு கொள்க (74). படிவம் என்பதும் அப்பாடல் ஆட்சியில் உண்டு என்பதும் அறிக.

“னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது” (எழுத். 1) என்று இவர் எழுதுவது கொண்டு சமணர் என்பர். முற்பட வைக்கப்பட்ட அகரத்தின் சிறப்புக் கூறியவர் பிற்பட வைக்கப்பட்ட னகரத்தின் சிறப்புக் கூறுவாராய் இது கூறினர். முற்படக் கூறலும் சிறப்பே; பிற்படக் கூறலும் சிறப்பே என்பது நூன்முறை. அம்முறைக்கேற்ப னகரச் சிறப்பாகக் கூற இதனைக் கூறினாரேயன்றி ‘மகளிர் வீடு பேறு எய்தார்’ என்னும் குறிப்பு அதில் இல்லை எனக் கொள்க.[1]

இனிச் சமணர் அல்லர் என்பதற்கு, “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்” எனவரும் தொல்காப்பிய (பொ. 635) நூற்பாவில் விசும்பும் ஒரு பூத மெனக் கொண்டதைக் காட்டுவர். நூற்பாவிற் கிடந்


  1. 1. உரையாசிரியர்கள் 88-89; இளம்பூரணர் எழுத்துரை (விளக்கமும் குறிப்பும்) 4-6.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/117&oldid=1471433" இலிருந்து மீள்விக்கப்பட்டது