பக்கம்:இலக்கண வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரும் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவரும் ஒருவரே என்பர். ஒருவர் ஒரு நூற்கு ஒரு பெயரும், மற்றொரு நூற்கு ஒரு பெயரும் கொண்டு உரை வரைந்தனர் என்றல் மரபு நிலைப்படாது. ஒருவர் இருவர் மூவர் பெயர் கொண்டெழுதிப் பிழைக்கும் ‘வணிக நோக்கர்’ அச்சடிப்புக் காலத்தே காணலாமேயன்றிப் பயில்வார் பயன்பாடு என்னும் ஒன்றே குறியாகக்கொண்ட ஏட்டுக்காலத்துத் தூயரை அக்கூட்டிற் சேர்க்க வேண்டுவதில்லையாம்.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல நூல்களுக்கு உரை கண்டவர். அவர் தம் பன்னூல் உரையொப்பைச் சுட்டிச் சுட்டிச் செல்கிறார். அத்தகு குறிப்பொன்றும் இளம்பூரணர் உரையில் இன்மை, இக்கருத்தின் அகச் சான்றின்மைச் சான்றே. ஒரு தனிப்பாடல் செய்தி கொண்டு இம்முடிவுக்கு வருதல் சாலாது. ‘மணக் குடி புரியான்’ என்பது ‘மணக்குடவர்’ பெயராகலாம். ஆனால் ‘மணக்குடி புரியராம் அவரே இளம்பூரணர்’ என்பதற்கு அப்பாடல் சான்றாகாது. மற்றும் ‘உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்’ எனக் கூறும் அடியார்க்கு நல்லார் ‘மணக்குடவராகிய இளம்பூரண அடிகள்’ என்று கூறத் தவறார். ஏனெனில் உரையாசிரியர் என்னும் பொதுப் பெயரினும் அவர் குடிப் பெயர் விளக்கமானதன்றோ!

தொல்காப்பிய இளம்பூரணருரை முற்றாகக் கிடைத்துளது. அதில் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. திருக்குறள் மணக்குடவருரையும் முற்றாக வாய்த்துளது. அதிலும் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. சிதைவுற்ற நூலாயின் தனித்துக் கிடைக்க — பிறர் உரைக்கண் கண்டெடுக்க முறையுண்டு. அன்னவகை எதுவும் இல்லாச் சிறப்புப் பாயிரங் கொண்டு முடிவுக்கு வருதல் தகுவது அன்று.

இளம்பூரணர் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குத் தரும் பொருளுரை மணக்குடவருரையொடும் பொருந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/120&oldid=1471299" இலிருந்து மீள்விக்கப்பட்டது