பக்கம்:இலக்கண வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

நிற்பதைக் காட்டி ஈருரையும் அவருரையே என்பர். ஈருரையும் பொருந்தாவுரையும் உண்மையால் வேறுரையாம் என்பார்க்கு மறுமொழி இல்லாமை கண்கூடு.

துறவாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்பது தொல்காப்பியம் (பொ. 75).

துறவாவது ஒருவன் தவம் பண்ணாநின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல் என்பது திருக்குறள் மணக்குடவருரை (அதி. துறவு).

ஒப்பியவுரையை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு போற்றுவதும், ஒப்பா இடத்து மட்டும் தம் உரையும் விளக்கமும் தருதலும் உரை மரபு ஆகலின் இளம்பூரணத்தைக் கற்ற மணக்குடவர் தம் உரையில் அவ்வுரையைப் போற்றிக் கொண்டார் என்பது பொருந்துவதாம்.

இளம்பூரணர் உரையில் காணும் எடுத்துக்காட்டுகளைத் தொகையிட்டுக் காண்பவர் திருக்குறள் மணக்குடவர் உரையை இவருரையெனக் கொள்ளார் என்பது தெளிவு.

இளம்பூரணர் உரை வழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார். ஆகுபெயர் என்ற அளவானே குறித்தார் தொல்காப்பியர் (சொ. 110). அதனை “ஆகுபெயர் என்ற பொருண்மை என்னை யெனின், ஒன்றன் பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு” என்றார் இளம்பூரணர். அதனையே நன்னூலார் “ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன் முறை யுரைப்பன ஆகு பெயரே” என நூற்பாவாக்கிக் கொண்டார் (பெயர். 33). இவ்வாறு இளம்பூரணக் கொடை மிகக் கொண்டு விளங்கியது நன்னூலாகலின், அந்நூலார் காலத்துக்கு முன்னவர் இளம்பூரணராவர். நன்னூலாரைப் புரந்த சீயகங்கன் காலம் கி. பி. 13 ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/121&oldid=1471300" இலிருந்து மீள்விக்கப்பட்டது