பக்கம்:இலக்கண வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஒன்றே பின்னுங் குறித்தது எனப்படும்” என்பதன் வழியாக ஓரிலக்கணம் கூறுவதுடன் புத்தகம் என்பதன் செவ்விய வடிவத்தையும் நிலைப்படுத்துகிறார்.

சங்கத்தார் நாளில் 'உளறுதல்' என்பது கூந்தலை உலர்த்துதல் பொருள் தந்தது. அப்பொருளை இளம்பூரணர் காலத்தில் 'உலறுதல்' என்பது தரலாயிற்று என்பதை, "உலற்றத் திறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறி தின்றாரைக் கண்டு ஒருவன், எம்பெருமான் அலறி தின்றீரால் என்றக்கால் வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தால் உலறினேன் என்க. இது தனக்கு உற்றதுரைத்தது" என்பதன் வழியாக அறிய வைக்கிறார் (சொ, 56).

பிறரொடு தொடர்பில்லானைக் ‘கெழீஇயிலி’ என்பதும் (சொ. 57) தொழில் செய்யும் ஏவலாட்டியைத் ‘தொழீஇ’ என்பதும் (சொ, 122) அரிய சொல்லாட்சியாம்.

‘அண்ணாத்தேரி’ என்பதை இவர் எடுத்துக்காட்டுவதைத் திருவண்ணாமலையகத்து ஏரி எனக் கருத்துரைத்தார் உளர். அது 'வானம்பார்த்த ஏரி' என்பதாம். ஆறு, கால் ஆயவற்றின் நீர் வரத்தின்றி வானம் பார்த்து இருக்கும் ஏரியே அப்பெரியதாம் (எ. 134). ‘அண்ணாத்தல்’ 'அண்ணாந்து நீர் குடித்தல்' என்னும் வழக்குகளைக் கொண்டு அறிக. “அண்ணாத்தல் செய்யா தளறு” என்றார் வள்ளுவர். திட்டாத்துக்குளம் என்று பிறர் கூறுவது மேடுபட்ட குளம் என்றாதல் சுருதுக.

“காமப்புணர்ச்சி எனினும், இயற்கைப் புணர்ச்சி எனினும், முன்னுறு புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் ஒக்குமென” ஒரு பொருட் பலபெயரைச் சுட்டி ஐயமகற்றுகிறார் (களவியல் முன்னுரை).

செங்கடுமொழி என்பதைக் “கொடிய கடுமொழியேயன்றி மனத்தினால் இனியளாகிக் கூறும் கடுமொழி” என நயமுற விளக்குகிறார் (பொ. 112).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/125&oldid=1471435" இலிருந்து மீள்விக்கப்பட்டது